சிறுவர்களுக்கான நீதி கதைகள்
இப்போதைய குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது என்பது மிகவும் சிரமமான காரியம்தான். காரணம் தற்போதைய குடும்பங்களில் கதை சொல்லிப் பெரியவர்கள் இப்போதெல்லாம் காணாமல் போய் விட்டார்கள்.
லைக்கு செல்லும் தாய்க்கும் தந்தைக்கும் ஆயிரம் பணிகளுக்கு நடுவே குழந்தைக்கான கதைகளாக எதனை சொல்வது என்கிற தெளிவும் இல்லை. தங்களுக்கு இருக்கின்ற பரபரப்பு மற்றும் பதட்டங்களால் தாங்கள் சிறுவயதில் படித்த பல கதைகளை நினைவில் வைத்திருக்க அவர்கள் தவறி விடுவார்கள்.
குழந்தைகளுடன் நீங்கள் ஒன்றியிருக்க உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கதை நேரம் என்கிற ஒன்றை உருவாக்குங்கள். யூட்யூபில் குழந்தைகளுக்கு கார்ட்டூன் போட்டு விடுவதை விடவும் உங்கள் குழந்தைக்கும் உங்களுக்குமான பந்தத்தை அதிகரிக்க நீடித்திருக்க செய்ய நீங்கள் கதைகளை உங்கள் வாயிலாக சொல்லிக் கொடுப்பது சிறந்த முறையாகும்.
வாரத்தில் ஒரு மணி நேரத்தை இப்படியான கதை தருணங்களாக மாற்றி விடுங்கள். எப்போது அந்த நேரம் வரும் என குழந்தைகள் ஏங்கும் வண்ணம் சுவாரஸ்யமாக சில கதைகளை சொல்லி உங்கள் குழந்தையின் உலகில் மிக முக்கிய இடத்தை பிடித்துக் கொள்ளுங்கள்.
1. கரடியும் தேனீக்களும்
அது ஒரு அழகிய அடர்ந்த வனம். அந்த வனத்தில் ஒரு பயங்கரமான கரடி ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அந்த கரடி மிகுந்த பசியோடு காட்டில் உணவிற்காக அலைந்தது. வெகு நேரமாகியும் அதற்கு உணவு கிடைக்கவில்லை.
வழியில் இருந்த மரத்தின் மீது பெரிய தேன் கூடு ஒன்றினை கண்டது. தேன் கூட்டைக் கண்ட கரடி, தேன் கூட்டை உடனே கலைத்து அதில் உள்ள தேனை குடிக்க நினைத்தது. மெதுவாக அதன் அருகில் சென்றது.
கரடி தேன் கூட்டிற்கு அருகில் செல்லும் நேரம் பார்த்து, வெளியில் சென்றிருந்த தேனீ ஒன்று, கரடி தேன் கூட்டிற்கு அருகில் வருவதை பார்த்தது. உடனே அதன் அருகில் சென்றது. கரடி அந்த தேனியைப்பார்த்து, நான் இப்போது உங்கள் தேன்கூட்டில் உள்ள தேனை சாப்பிடப்போகிறேன் என்று சொன்னது. மனம் வருந்திய தேனீ, இது எங்கள் வீடு, இதை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கெஞ்சியது.
ஆனால் கரடியோ தேனியை பார்த்து, நீயோ அளவில் சிறிய உருவம் கொண்டிருக்கிறாய். நான் உன்னை விட பல மடங்கு பெரியவன் தெரியுமா? உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது போ என்று கூறியது. விபரீதத்தை உணர்ந்த தேனீ, கரடியிடம் எனக்கு ஒரு நிமிடம் மட்டும் அவகாசம் கொடு, நான் என்னுடைய பொருட்களை எல்லாம் தேன்கூட்டில் இருந்து எடுத்து சென்று விடுகிறேன் என்று கூறியது. கரடியும் சரி என்று இதற்கு ஒத்துக்கொண்டது.
தேன் கூட்டிற்கு சென்ற அந்த தேனீ, தேன்கூட்டில் இருந்த எல்லா தேனீக்களிடம் நடந்த சம்பவத்தைப்பற்றி கூறியது. உடனே எல்லா தேனீக்களும் கூட்டிலிருந்து வெளியே வந்தன.
கூட்டிலிருந்து வெளியே வந்த தேனீக்கள், கரடியை கொட்டத் தொடங்கின. கரடிக்கு தேனீக்கள் கொட்டியதால் வலி பொறுக்க முடியாமல் துடித்தது. மேலும் வலி தாங்க முடியாத நிலையில் கரடி ஓடத் தொடங்கியது. தேனீக்களும் கரடியை விடாமல் பின்தொடர்ந்து சென்றன.
போராட்டத்தின் முடிவாக வேறு எந்த வழியும் இல்லாமல், தேனீக்களிடமிருந்து தப்பிக்க, கரடி காட்டில் இருந்த ஆற்றின் நடுவில் குதித்தது. சரி போனால் போகட்டும் என்று தேனீக்களும் கரடியை மன்னித்து தேன் கூட்டிற்கு சென்றன.
நீதி: உருவத்தை வைத்து யாரையும் அலட்சியமாக எண்ணக்கூடாது!
2. தந்திர நரி
ஒரு அடர்ந்த காட்டிற்குள் சிங்கம் ஒன்று பசியின் காரணமாக மானை துரத்தியது.
சிங்கத்திடம் சிக்கிக்கொள்ளாமல் மான் எப்படியோ, தன்னை ஒருவழியாக காப்பாற்றிக் கொண்டது. சிங்கமும் ஏமாற்றத்துடன் குகைக்கு திரும்பியது. ஓடும் போது மானுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டு ஒரு இடத்தில் விழுந்தது.
இதை பார்த்த நரி ஒன்று, மானை எப்படியாவது உண்ண வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டியது. தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்துக்கொண்டே அருகில் வந்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து, அதனை உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மெதுவாக நடந்து அருகில் வந்தது.
தொலைவில் இருந்தே, உனக்கு உடல்நிலை சரியில்லையா? என்று அன்பாக பேசிக்கொண்டே, சிறிது சிறிதாக அருகில் வந்து நின்றது. மானும் நமக்கு உதவி தான் செய்கிறது என்று நம்பி ஏமாந்து விட்டது.
நரி மகிழ்ச்சியுடன் அருகில் பாய்ந்து சென்றது. வலியில் பேசிய மான் “எனக்கு சீக்கிரம் உதவி செய், என்னை தூக்கிவிடு” என்று கூறும்போதே, நரி, அதனுடைய தொண்டை பகுதியை கடித்து குதறியது. துடி துடித்து மானும் இறந்து போனது. இறுதியாக தன் பசியினை தீர்த்துக் கொண்டது நரி. அன்பாக பேசி அரவணைப்பது போல நடித்து தன் எண்ணங்களை நிறைவேற்றிக்கொண்டது.
நீதி: யார் இனிமையாக பேசினாலும் உடனே நம்பி விடக் கூடாது.
3. பொய் சொல்லாதே
அது ஒரு அழகிய குட்டி கிராமம். அந்த ஊரில் மாணிக்கம் என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். மாணிக்கம் தினமும் தன்னுடைய ஆடுகளை பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஓட்டிச்சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் வெளியே சென்றால், மாலையில் தான் வீடு திரும்புவார்.
ஒரு நாள் மாணிக்கம் தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக வேறு ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை, தன் மகன் ராமுவிடம் கொடுக்கலாம் என நினைத்தார். அப்போது மாணிக்கத்திற்கு ஒரு பயமும் இருந்தது. ராமு விளையாட்டு பையனாக இருந்தான். எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய மாட்டான். வேறு வழி இல்லாமல், அவனிடமே மாணிக்கம் ஆடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்து பக்கத்து ஊருக்கு புறப்பட்டார்.
அடுத்த நாள் காலை விடிந்ததுமே, ராமு ஆடுகளை பக்கத்தில் உள்ள காட்டுக்கு ஓட்டிச்சென்றான். ஆடுகளை ஒரு பக்கம் மேயவிட்ட பிறகு, ராமு அருகில் உள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். அவனுக்கு வேலை பார்த்து பழக்கமில்லை என்பதால் பொழுது போகவில்லை. அருகில் இருந்த வயலில் சிலர் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
வேலை செய்பவர்களின் கவனத்தை தன் பக்கம் திசை திருப்ப எண்ணிய ராமு திடீரென “புலி வருதேய், புலி வருதேய்” என்று கூச்சலிட்டான்.
ராமுவின் அலறல் சத்தத்தை கேட்டு, வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், புலியை விரட்டகட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு, ராமு அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தனர்.
பக்கத்தில் வந்தவர்களிடம் “புலி எல்லாம் வரவில்லை. நான் பொய் சொன்னேன்” என்று விளையாட்டாக கூறியுள்ளான். இதனால் கோபமடைந்த அவர்கள் ராமுவை நன்றாக திட்டிவிட்டு சென்றனர். ராமுவிற்கு அவர்களை ஏமாற்றியதை நினைத்து மகிழ்ச்சி. ராமு ஆடுகளை கூட்டிக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான். அடுத்த நாளும் ராமு “புலி வருது” என்று கூச்சலிட்டு வேலை செய்து கொண்டு இருந்தவர்களை ஏமாற்றினான்.
மூன்றாவது நாள், ஆடுகளை மேய்க்க விட்டு, ராமு அதே பாறையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் ஒரு புலி வருவதை பார்த்தான். உடனே “புலி வருகிறது” என்று கூச்சலிட்டான்.
ராமு அலறலை கேட்ட மக்கள் “அவன் இன்றும் பொய் தான் சொல்வான்” என்று நினைத்து யாரும் உதவ வரவில்லை. அவர்கள் தங்கள் வேலையை தொடர்ந்தனர். புதருக்குள் இருந்து பாய்ந்து வந்த புலி, ஒரு ஆட்டினை தூக்கிச்சென்றது.
நான் உண்மையை கூறியும், யாரும் உதவிக்கு வரவில்லையே என்று வருத்திக் கொண்டு, மீதி இருக்கும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான் ராமு.
நீதி: ஒருவன் வார்த்தையில் உண்மை இல்லை என தெரிந்துவிட்டால், அவன் எப்போது உண்மை சொன்னாலும், அதை யாரும் உண்மை என்று நம்ப மாட்டார்கள்.
4. ஆயிரம் நாணயங்கள்
அபுவிற்கு கடவுளிடம் சத்தம் போட்டு வேண்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. ஒரு நாள், “கடவுளே எனக்கு ஆயிரம் நாணயங்கள் கொடு. அதில் ஒரு நாணயம் குறைந்தாலும் வாங்கமாட்டேன்.” என்று கடவுளிடம் வேண்டினார்.
அபுவின் வேண்டுதலை, ஒளிந்திருந்து தினம் தினம் கேட்டுக்கொண்டு இருந்த பால்காரர் ஒருவர், அவரை ஏமாற்ற நினைத்து சதி வேலையில் இறங்கினார். தன்னிடம் இருந்த 999 நாணயங்களை ஒன்றாக பையில் கட்டி அபுவின் வீட்டை நோக்கி வந்தார்.
அபுவின் வீட்டை அடைந்ததும், ஜன்னல் வழியாக நாணயங்களை அபுவை நோக்கி வீசினார்.
அபு வேண்டுதலை முடித்த பிறகு, அருகில் ஒரு பை இருப்பதை பார்த்தார். அதை திறந்து பார்த்த போது, உள்ளே நாணயங்கள் இருப்பதை கண்டார். உடனே கடவுள் தான் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார் என நினைத்துக்கொண்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்து நாணயங்களை என்ன தொடங்கினார்.
அபு காசை என்ன தொடங்கிய பொழுது, அதை ஜன்னல் வழியாக பால்காரர் எட்டிப்பார்த்தார். அபு நாணயங்களை எண்ணி முடித்த பிறகு, அதில் 999 நாணயங்கள் மட்டுமே இருந்தது.
நன்றி கடவுளே, மீதம் உள்ள ஒரு நாணயத்தை சீக்கிரமாக கொடுத்துவிடு என்று வேண்டினார். இதனை சற்றும் எதிர்பாராத பால்காரர் அபுவிடம் சென்று, இந்த நாணயங்கள் என்னுடையது. நான் தான் உன் வீட்டிற்குள் தூக்கி எறிந்தேன். என்னிடம் கொடுத்து விடு என அபுவிடம் கெஞ்சினார். ஆனால் பணிவாக பேசிய அபு, இல்லை இல்லை கடவுள், “உன் மூலமாக எனக்கு உதவி செய்துள்ளார்” என கூறி, உனக்கு கொடுக்க இயலாது” என கூறிவிட்டார்.
பிறகு வேறுவழி இல்லாமல் பால்காரர் பஞ்சாயத்துக்கு போகலாம் என்று அபுவிடம் கூறிவிட்டார். ஆனால் அபு, எனக்கு உடல் நிலை சரி இல்லை என்று கூறினார். அதற்கு பால்காரர், “என்னுடைய கழுதையை உனக்கு தருகிறேன் என்னுடன் வா”, என்று அபுவிடம் கூறினார். அதற்கு அபு என்னுடைய உடையை பார், ரொம்ப அழுக்காக உள்ளது என்று கூறினார்.
பிறகு பால்காரரிடம் இருந்து புது உடையும் வாங்கிக்கொண்டு பஞ்சாயத்துக்கு சென்றார் அபு. ஒரு வழியாக நீதிபதியிடம் வந்து சேர்ந்து விடுகின்றனர். நீதிபதி முழு விவரத்தையும் கேட்டு அறிந்து கொண்டார். முதலில் நீதிபதியிடம் பேசிய அபு, பால்காரரை நம்பாதீர்கள். அவர் மற்றவர்களின் பொருட்களை எல்லாம் தன்னுடையது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், என்னுடைய துணியையும், பின்னால் இருக்கும் கழுதை இரண்டையும், என்னுடையது என்றே சொல்லுவார் என்று கூறினார்.
அடுத்த நொடியே, பால்காரர் அபு அணிந்துள்ள துணி மற்றும் அந்த கழுதை இரண்டு என்னுடையது என்று நீதிபதியிடம் கூறினார்.
உடனே, நீதிபதி அபு, நீ உன்னுடைய பண பையை எடுத்து செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கினார். இதை கேட்ட பால்காரர் தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்து கண்ணீர் விட்டார்.
இறுதியில் அபு அந்த பணப்பையையும் , அந்த கழுதையையும் எடுத்துக்கொண்டு தனது இல்லம் நோக்கி நடந்தான்.
நீதி: முட்டாள்தனம் இழப்பையே தரும்.
5. சிங்கமும் சிலையும்
ஒருநாள் பாபு தன்னுடைய சிங்கத்தை அழைத்துக் கொண்டு அடர்ந்த காட்டிற்குள் தேன் எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். அப்போது தங்களில் யார் அதிக வீரம் உள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும், பாபுவும் பேசிக்கொண்டிருந்தனர்.
இப்படியே இருவரும் விவாதம் செய்து கொண்டே நடந்து செல்லும் வழியில், ஒரு சிலை தென்பட்டது. “ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளிவிட்டு, அதன் மேலே ஏறி நிற்பதைப் போல” ஒரு சிலை இருந்தது.
”அந்த சிலையை பார்த்தாயா? இப்போது யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.” என்றான் பாபு.
‘இதைக்கேட்ட சிங்கம். “ஓ..! அது மனிதன் செய்த சிலை ஆச்சே. இதுவே ஒரு சிங்கம் அந்த சிலையை செய்திருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்” என்று சொல்லியது.
நீதி : தனக்கு என்று வந்தால், தனி மதிப்பு வந்து விடும்.
6. விவசாயி, மகன், கழுதை
ஒரு நாள் ராமுவுக்கு திடீரென ஒரு யோசனை வந்தது, தன்னுடைய கழுதையை விற்று விடலாம் என தீர்மானித்தார். ஊருக்கு பக்கத்தில் இருந்த கிராமத்துக்கு தன் கழுதையையும், மகனையும் அழைத்துக் கொண்டு சென்றார். இரண்டு பேரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே சென்றார்கள்.
நடந்து சென்று கொண்டிருக்கும் போது அதைப்பார்த்த ஒருவர், இவர்களைப் பார்த்துச் சிரித்தார். ‘கழுதை சும்மா தானே நடந்து செல்கிறது. உங்களில் யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே’ என்றார்.
அதுவும் சரிதான் என்று ராமு தன் மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார். சிறிது தூரம் சென்றதும், எதிரே வந்த இன்னொருவர், “ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைக்கிறாய், நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா?’ என ராமுவின் மகனைப்பார்த்து கேட்டார்.
உடனே ராமுவின் மகன் கீழே இறங்கிக் கொண்டு, ராமுவை கழுதை மீது அமரச்சொன்னான். ராமுவும் அவ்வாறே செய்தார்.
இப்படியாக இன்னும் கொஞ்ச தூரம் பயணித்த பிறகு, இன்னொருத்தர் ராமுவை பார்த்து கடிந்து கொண்டார். ‘ஏனய்யா இப்படி சின்ன பையனை நடக்க விட்டு, நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா?’ என கேட்டார்.
ஆளாளுக்கு இப்படிச் சொல்கிறார்களே அடுத்து என்ன செய்வது..? என யோசித்து முடிவாக இருவருமே அந்த கழுதையின் முதுகில் ஏறிச் செல்வோம் என முடிவெடுத்து ஏறிக்கொண்டனர்.
சிறிது தொலைவு அப்படியே சென்றதும், இரண்டு பேரும் கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர், ‘அடக்கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவது.? இவர்களுக்கு ஈவு இரக்கமே இல்லையா?’ என எள்ளி நகையாடினர்.
அவர்கள் பேச்சைக் கேட்டவுடன் ராமுவுக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. உடனே இருவரும் கழுதையின் மீதிருந்து கீழே குதித்தார்கள்.
ஒரு செயலில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல், அடுத்தவர் சொல்வதைக்கேட்டு இப்படி ஆகிறதே என்று வருந்திக்கொண்டே சென்றனர்.
நீதி: சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.
7. தவளையும் சுண்டெலியும்
அது ஒரு அழகான குளம். அந்த குளத்திற்கு அருகிலேயே ஒரு சிறிய மரபொந்து ஒன்று இருந்தது. அதற்குள் சுண்டெலி ஒன்று மகிழ்ச்சியாக வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கும், குளத்தில் வசித்து வந்த தவளைக்கும் நட்பு ஏற்பட்டது. தினம் தினம் அந்த தவளையும், எலியும் சந்தித்து கொள்ளும்.
ஒரு நாள் தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த எலி, தவளையிடம் சென்று, ” தவளையே தவளையே எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா?” என்று கேட்டது. உடனே தவளையும், ” சரி நண்பா.. நாளைக்கு உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றது.
அடுத்த நாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத் தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை, எலியின் காலோடு சேர்த்து ஒரு கயிறால் கட்டிக்கொண்டது.
அந்த நேரம் பார்த்து வானில் பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளை தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள சுண்டெலியுடன் சேர்த்து தண்ணீரில் பாய்ந்தது. தவளை நீருக்குள் செல்ல செல்ல தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்தது. இருந்தாலும் சுண்டெலியின் கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே தான் இருந்தது.
அந்த நேரம் தண்ணீரின் மீது சுண்டெலி இறந்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து, எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்து போனது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த, தவளையும் பருந்தின் பிடியில் சிக்கிக்கொண்டது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வந்தாச்சு. இரண்டு விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் பருந்து தவளையையும் கொன்று தின்றது.
நீதி: நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும்.
8. பாம்பும் விவசாயியும்
அது ஒரு அழகிய குளிர்கால நேரம். பாம்பு ஒன்று பனியின் உக்கிரத்தால் விரைத்து உயிர் போய்விடுமோ என்கிற நிலையில் சுருண்டு கிடந்தது.
அந்த நேரம் பார்த்து அவ்வழியே வந்த விவசாயி ஒருவர், அந்த பாம்பினை கண்டுள்ளார். மிகுந்த இரக்க குணம் உள்ள அந்த விவசாயி அந்த பாம்புக்கு உதவிட நினைத்தார்.
பாம்பினை எடுத்து தன் உடலோடு சேர்த்து அணைத்து அதனைச் சூடேற்றினார். விவசாயியின் உடல் சூடு பட்ட உடனே, பாம்பு மெல்ல மெல்ல உணர்வு பெற்றது.
ஓரளவுக்கு நன்றாக உணர்வு வந்ததும், தன்னைக் காப்பாற்றிய விவசாயின் நெஞ்சில் பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் விஷம் ஏறி உயிர் போகும் நிலைக்கு தள்ளப்பட்ட அந்த விவசாயி, தன் செய்கைக்காக மனம் வருந்தினார்.
பாம்பைப் பார்த்து “ஏ நன்றி இல்லா பாம்பே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே! உன்னுடைய குணம் தெரிந்தும், நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கான சரியான தண்டனை எனக்கு கிடைத்து விட்டது” என்று கூறிவிட்டு இறந்தார்.
நீதி: தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையாகவே முடியும்.
9. இரண்டு முட்டாள் ஆடுகள்
அது ஒரு அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடக்க இரண்டு ஆடுகள் எதிர் எதிர் திசையில் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும், மற்றொன்று பாலத்தின் மறுமுனையிலும் வந்து நின்றது.
அந்த பாலத்தை ஒரே நேரத்தில், ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது நன்றாக தெரிந்திருந்தும், இரண்டு ஆடுகளும் பாலத்தை ஒரே நேரத்தில் கடக்க வேண்டும் என்று நடுவில் வந்து நின்றன.
முதலாவது ஆடு “எனக்கு வழி விடு நான் உடனே செல்ல வேண்டும்” என்றது. அடுத்து, இரண்டாவது ஆடு “நான் தானே முதலில் வந்தேன்; நீ தான் எனக்கு வழி விடவேண்டும்” என்றது. இப்படியே மாறி மாறி இரண்டு ஆடுகளும் விட்டுக் கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின.
சண்டையிடும் போது நிலை தவறிய இரு ஆடுகளும் ஆற்றில் விழத்தொடங்கின. ஆற்றில் விழுந்த பிறகு தான், இரு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியாக ஆற்று நீரில் மூழ்கி இறந்தன.
நீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில், கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.
10. கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்
ஒரு ஊரில் ராமு, சோமு என்ற இணை பிரியாத நண்பர்கள் இருந்தனர்.
ஒரு நாள் தேன் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்த இருவரும், தேன் எடுக்க காட்டுக்குப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் பேசிக்கொண்டே வந்த ராமு சோமுவை பார்த்து, ” நீ எதற்கும் பயப்படாமல் என்னுடன் வா. உனக்கு என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறினான்.
செல்லும் வழியில் பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் என்று அழகான சூழலை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றார்கள்.
அப்போது கரடியின் உறுமல் சத்தம் கேட்டுள்ளது. யோசித்து முடிப்பதற்குள் அவர்கள் செல்லும் வழியில் கரடி வந்து நின்றது. கரடியை பார்த்ததும் இருவரும் பயந்து ஓடத்தொடங்கினார்கள். கரடி அவர்களை வேகமாக துரத்தியது. ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் ராமு ஒரு மரத்தின் மீது ஏறி விட்டான். சோமுவை பற்றி நினைக்கவில்லை.
சோமுவுக்கு மரம் ஏறத்தெரியாது. இது ராமுவுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் மரத்தில் ஏற முடியாதவனைக் கீழே விட்டு விட்டுத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள, ராமு சுய நலத்துடன் நடந்து கொண்டான்.
எப்படியோ இறந்தவன் போல நடித்து, கரடியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டான் சோமு.
சோமு இறந்துவிட்டதாக எண்ணி கரடி சென்றுவிட்டது. அதனை மரத்தின் மீது இருந்து பார்த்த ராமு கீழே இறங்கி வந்து சோமுவை எழுப்பினான். கரடி போயாச்சு எந்திரி என்றான். சோமுவும் தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதியடைந்தான்.
ஒரு பக்கம் கரடி ஆபத்தில் இருந்து தப்பித்தாலும், இன்னொரு பக்கம் தன் நண்பனின் சுயரூபத்தை அறிந்து கொண்டான் சோமு. ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது என்று மனதில் நினைத்துக்கொண்டான்.
நீதி: ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.