சுகப்பிரசவம் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஆச்சர்யமான உண்மைகள் !

Written by
Last Updated on

சுகப்பிரசவம் என்பது இப்போதெல்லாம் ஏழு மலை ஏழு கடல் தாண்டி எங்கோ ஒரு அடர்வனத்தின் நடுவே அமர்ந்திருக்கும் கிளியின் கையில் உள்ள ஒரு விஷயம் போல அதிசயமான ஒரு விஷயமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆய்வின் படி 85 சதவிகித பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கும் என்றும் மீதி 15 சதவிகிதப் பெண்களே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது (1).

ஆனால் புள்ளி விவரங்கள் சொல்லும் எண்ணிக்கை என்ன என்றால் மூன்றில் ஒரு பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பிறப்பு நடப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டுரையில் சுகப்பிரசவம் பற்றிய முக்கியமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனைப் பின்பற்றி   பிரசவத்தை சுகமானதாக மாற்றுங்கள்.

சுகப்பிரசவம் என்றால் என்ன

இயற்கையான முறையில் உங்கள் வயிற்றில் வளரும் உயிரை அதே இயற்கையான முறையில் இந்த பூமிக்கு அறிமுகப்படுத்துவதுதான் சுகப்பிரசவம் ஆகும். உங்கள் உடல் ஆரோக்கியமானதாக இருந்தால் இந்த முறையில் குழந்தை பெறுவது என்பது மிகவும் சுலபமான ஒன்றுதான்.

அதுவும் தவிர சுகப்ரசவ முறையில் பிறக்கும் குழந்தையானது மிகவும் ஆரோக்கியமான குழந்தையாக இருக்கும். போலவே உங்கள் உடலானது சுகப்பிரசவம் நடப்பதன் மூலம் வெகு சீக்கிரமே மீண்டு பழைய ஆரோக்கியத்திற்கு வந்து விடும் (2). அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் பிரசவத்தால் உங்களுக்கு ஆயுள் முழுதும் ஆரோக்கிய குறைபாடு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்

உங்களுக்கு பிரசவ நாள் குறிக்கப்பட்ட பின்னர் அதில் சில மாற்றங்கள் நிகழலாம். அதனால் அதற்கான அறிகுறிகளை உங்கள் மருத்துவர் குறிப்பிட்டு இப்படியான மாற்றங்கள் உடலில் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி கூறுவார். அதைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம். இருப்பினும் பெண்ணிற்கு பெண், பிரசவத்திற்கு பிரசவம் இந்த அறிகுறிகள் வேறுபடலாம்.

பிரசவ நாளிற்கு நான்கு வாரங்கள் முன்பு ஏற்படும் மாற்றங்கள்

  • குழந்தையின் அசைவு நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். காரணம் அது இடுப்பின் கீழ் பகுதிக்கு இறங்கி இருக்கலாம்.
  • எலும்புகள் தளர்வாகும். இடுப்பெலும்புகள் பிரசவத்திற்கு தயாராகத் தன்னைத் தளர்வாக்கி கொள்ளும்.
  • குழந்தையின் தலை சிறுநீர்ப்பையை முட்டுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும்.
  • உண்மையான பிரசவ வலிக்கு முன்னர் பொய்யான வலிகள் ஏற்படும்
  • கீழ் முதுகெலும்பின் நரம்புகள் இறுக்கமாக மாறி வலி ஏற்படுத்தும். எலும்புக் கணுக்கள் விரிந்து கொடுப்பதாலும் தசைகள் நீட்சி அடைவதாலும் இந்த வலி ஏற்படும்.
  • கருப்பை வாய் அகலமாகும். இதனை மருத்துவர் தனிப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்வார்.
  • நீர்த்த கட்டிகள் போல சிறுநீரில் வெளியேறும். இது குழந்தை பெறப் போவதன் அறிகுறியாகும்.

குறைப்பிரசவம் அல்லது பிரசவத்திற்கு சில மணி நேரம் முன்பான அறிகுறிகள்

  • வெள்ளைப்படுதல் அதிக அடர்த்தியுடன் வெளியாகும்.
  • ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் சளித்திசு போன்ற பொருள் வெளியாகும். அது இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பின் உங்கள் பிரசவ நேரம் தொடங்கி விட்டது என்றுதான் அர்த்தம்.
  • அதிகமான பிரசவ வலி அறிகுறிகள் ஏற்படும். சிறிது நேரம் விட்டு விட்டு எடுத்த பிரசவ வலியானது அரைமணிக்கு ஒருமுறை அல்லது கால் மணிக்கு ஒருமுறை என ஏற்படும்.
  • கீழ் முதுகில் இருந்த நரம்பு இறுக்க வலியானது வயிறு மற்றும் கால்கள் வரை பரவும்.
  • பனிக்குடம் உடையும். உங்கள் குழந்தையை சுற்றிலும் இருந்த பனிக்குடமானது உடைந்து விடும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் அருகில் இருப்போரை உங்கள் மீது கவனம் வைக்கும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.

சராசரிக்கும் அதிகமான பிரசவ நேர அடையாளங்கள்

  • வயிறு வெப்பம் அதிகரிக்கும். வெதுவெதுப்பான தன்மையை உணர முடியும்.
  • அடிக்கடி பிரசவ இடுப்பு வலி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
  • அதிகப்படியான இடுப்பு வலி நீடிக்கும் அளவு 40நொடி முதல் 60நொடி வரை நீடிக்கும்.
  • முதுகு வலி ஆழமானதாக மாறும்.
  • பிறப்புறுப்பில் ரத்தம் கசியத் தொடங்கும்.

ஒரு சில பெண்களுக்கு மேற்கண்ட எதுவும் இல்லாமலே பிரசவம் நடக்கலாம். ஒரு சில பெண்களுக்கோ மேற்கண்ட அத்தனை அடையாளங்களும் ஏற்பட்டு அதன் பின்னரே சுகப்பிரசவம் ஏற்படலாம் (3).

பிரசவம் சுகமான முறையில் ஏற்பட சில அத்யாவசியக் குறிப்புகள்

பிறப்புறுப்பின் மூலம் பிறக்கும் குழந்தைகள் மிக ஆரோக்கியமானது. பிறப்புறுப்பு என்கிற பெயரே குழந்தை பிறக்க இருக்கும் உறுப்பு என்பதால்தான் ஏற்பட்டது.எனவே அதன் வழி பிறக்கும் குழந்தையானது உங்களுக்கும் ஆரோக்கியம் தரும் அதுவும் ஆரோக்கியமான முறையில் பிறக்கும். அப்படியான சுகப்ரசவத்திற்கான சில எளிய குறிப்புகள் இதோ :

மன அழுத்தத்தில் இருந்து தள்ளி இருங்கள்

பிரசவ நேரத்தில் மன அழுத்தம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் பதட்டம், மன அழுத்தம் மற்றும் பய உணர்வுகளைத் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இவை இருந்தால் சுகப்பிரசவ அனுபவம் என்பது ஒரு பயங்கர கனவாக மாறி விடலாம்.

  • ஏதாவது ஒரு த்யான முறையைப் பின்பற்றுங்கள்
  • புத்தகம் படிப்பது இசை கேட்பது என உங்கள் கற்பனைத்திறனை அதிகரிக்கும் வேலையைச் செய்யுங்கள்
  • நல்ல நட்புடன் பழகும் ஆட்களுடன் இருங்கள்
  • உங்களுக்கு எதிர்மறையான உணர்வுகள் தரும் நபர்கள் மற்றும் சூழ்நிலைகளில் இருந்து விலகி இருங்கள்.

நேர்மறையாக இருங்கள் – தவறான பிரசவத் தகவல்களால் பயப்பட வேண்டாம்

சுலபமான பிரசவம் அதே சமயம் கஷ்டமான பிரசவம் இது பற்றியெல்லாம் நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை மனதில் போட்டுக் கொண்டு உங்களுக்கு எப்படி நடக்கும் என்கிற பயத்தை வளர்க்காதீர்கள்.

  • அப்படி பயமுறுத்தும் பிரசவ நேரம் பற்றி யாரேனும் சொன்னால் அவர்களிடம் இருந்து விலகிச் செல்லுங்கள்.
  • வதந்திகளை அனுமதிக்காதீர்கள்.
  • அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரசவ நிலை ஏற்படுவதில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பிரசவம் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

அறிவுதான் சிறந்த வலிமை கொடுக்கும்.ஆகவே குழந்தைப் பிறப்பு பற்றிய அறிவைப் பல்வேறு விதமான வகையில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

  • உங்கள் மருத்துவரை அணுகி பிரசவம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்
  • குழந்தைபிறப்பு குறித்த புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்
  • உங்கள் அம்மா அல்லது குடும்பத்தில் உள்ள மூத்த பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள்
  • உங்களைத் தளர்வாக வைக்கும் எந்த செயலிலும் ஈடுபடுங்கள்
  • குழந்தைப் பிறப்புக்கு முந்தைய வகுப்பிற்கு செல்வது நல்லது

அதே சமயம் அளவுக்கதிகமாய் எதையும் தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள். உங்களை பார்த்துக்கொள்ள அதற்கெனத் தனிப்பட்ட முறையில் படித்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். கவலை வேண்டாம்.

வலிமையான உறுதுணையாக நபர்களை உருவாக்குங்கள்

பிரசவ நேரத்தில் உங்களுடன் உறுதுணையாக இருக்க உங்கள் கணவர், அம்மா மற்றும் தோழிகள் போன்றவர்களைத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு நம்பிக்கை ஊட்டி உங்களை வலிமையானவராக மாற்ற வல்ல குழுவாக இந்தக் குழு செயல்பட உதவி செய்யுங்கள்.

  • குழந்தைப் பிறப்பு விஷயத்தில் நீங்களும் உங்கள் கணவரும் ஒரே பாதையில் செல்வது பற்றி உறுதி செய்து கொள்ளுங்கள்
  • உங்கள் குடும்பம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு பிரசவம் பற்றிய மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் குடும்பத்தாருடன் அதனைப் பகிர்ந்து அதன் முடிவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
  • இப்படியான உதவிக்குழு இருப்பது உங்கள் மன அழுத்தத்தை நீக்கும்.

உங்கள் மருத்துவரை அறிவார்ந்த முறையில் தேர்ந்தெடுங்கள்

பெரும்பான்மையான மருத்துவர்கள் தங்களிடம் வரும் கர்ப்பிணிகளிடம் அறுவை சிகிச்சை குறித்து பேசி அவர்களைப் பிரசவ கவலையில் இருந்து விடுவிக்கிறார்கள். ஆனால் இது தவறானது. சுகப்பிரசவம் மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள மருத்துவர்களை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.

  • உங்கள் மருத்துவர் மற்றும் மருத்துவமனை அதிக சுகப்ரசவங்களைச்    சந்தித்தவர்களாக இருப்பது நல்லது
  • சுகப்பிரசவம் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் உரையாடுங்கள்
  • உங்கள் சுகப்பிரசவம் பற்றி மருத்துவர் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் வேறொரு மருத்துவருக்கு மாறுங்கள்.

பெரினியல் மசாஜ்

குழந்தை சுகமான முறையில் பிறக்க இந்த பெரினியல் மசாஜ் மிகவும் உதவி செய்கிறது (4).

  • உங்கள் ஏழாவது மாதத்தில் இருந்து இந்த மசாஜை நீங்கள் செய்யலாம்
  • இது உங்கள் பிரசவத்தை சுகமாக்கும். மன அழுத்தத்தையும் நீக்கும்.
  • இதனை நீங்கள் யுட்யூப் வீடியோக்கள் மூலம் அறிந்து அதன்படி செய்யவும்.

நீர்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்

பிரசவத்தை சந்திக்கும் பெண்கள் அதிக நீர்ச்சத்தோடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

  • அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படுவதால் பிரசவ நேரங்களில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பது நன்மை தரும். உங்களுக்கு அதிகப்படியான பலமும் தெம்பும் நீர்ச்சத்து மூலமே ஏற்படும். ஆகவே அதிக நீர் குடிக்க மறக்க வேண்டாம்.
  • நீர்ச்சத்துக்குத்  தண்ணீர் போலவே பழச்சாறுகள் அல்லது ஆற்றல் தரும் நீர் உணவுகளை (Energy Drinks) நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

நீருடன் பழகுங்கள்

நீர் குடிப்பது மட்டுமல்லாமல் அதிக நேரம் நீருக்குள் இருப்பது சுகப்பிரசவம் நடக்க அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

  • வெதுவெதுப்பான நீர் நிரப்பிய பாத் டப்பில் அமர்ந்து அல்லது படுத்து உங்களைத் தளர்வாக்குங்கள்
  • ஷவர் அல்லது ஹாண்ட் ஷவர் மூலமும் உங்களை நீருக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.

அதிக சூடான நீர் உங்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும். ஆகவே கவனம்.

பிரசவ வலியைத் தாங்கும் ஐஸ் கட்டி விளையாட்டு

  • இந்த விளையாட்டு விளையாட உங்கள் கணவரின் உதவியும் தேவைப்படும்
  • உங்கள் கணவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஐஸ் கட்டியை உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளவும்.
  • 60 நொடிகள் வரை நீங்கள் ஐஸ்கட்டியை உள்ளங்கையில் வைத்திருக்க வேண்டும்.
  • அதன்பின் நடக்கும்போது 60 நொடிகள் ஐஸ் கட்டியை வைத்துப் பழகுங்கள்
  • இறுதியாகத் தனியாக 60 நொடிகள் வரை ஐஸ் கட்டியை நீங்கள் பிடித்திருக்க வேண்டும்.
  • இது உங்கள் பிரசவ வலியை எவ்வளவு தூரம் உங்களால் தாங்கி கொள்ள முடியும் என்பதை அறியும் ஒரு விளையாட்டு என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உங்கள் உடல் நிலைகளைக் கவனியுங்கள்

உங்கள் உடலை ஒருநிலையாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வயிற்றினுள் உள்ள குழந்தை இதனால் சௌகர்யமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உயர்ந்த செருப்புகள், இறுக்கமான இடுப்பு பெல்ட்கள் இவற்றைச் சில காலம் தியாகம் செய்யுங்கள். அதிக நேரம் நிற்பது , அமர்வது போன்றவற்றைத் தவிருங்கள்.

  • உட்காரும்போது பின்புறம் ஒரு தலையணை வைத்து அமருங்கள்
  • காலை நீட்டி அல்லது காலை மடித்து அமரலாம். காலைத் தொங்கப்போட்டு அமர்வது கால்களில் வீக்கம் ஏற்படுத்தும்.
  • படிகளில் வேகமாக ஏறி இறங்கக் கூடாது
  • உட்கார்ந்தபடியே பொருளை எடுப்பது குனிந்து பொருளைத் தூக்குவது கூடாது

அதிக எடை போடுவது கூடாது

ஒரு அளவான எடை அதிகரிப்பு என்பது பிரசவத்தில் அவசியமானது தான். ஆனால் அதுவே அதிகம் ஆனால் உங்களுக்குப் பிரசவமே கூட சிக்கலாக மாறி விடலாம்.

  • அளவுக்கதிகமான உடல் பருமன் உங்கள் குழந்தையையும் பருமனாக்கும். அதனால் பிரசவம் சிக்கலாகும் (5).
  • அளவுக்கதிகமான உடல் எடை பிரசவத்தை அறுவை சிகிச்சையாக மாற்றி விட வாய்ப்பு அதிகம்.

ஏன் சுகப்பிரசவ முறையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்

இதற்கு விடையளிப்பது மிக சுலபமானது தான். உங்கள் உடல் இயற்கையாகவே சுகப்ரசவ முறைப்படி குழந்தை பெறவே படைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் ஆயுட்கால உடல்நலத் தொந்தரவுகளில் இருந்து நீங்களும் உங்கள் குழந்தையும் காக்கப்படுவீர்கள்.

ஆரோக்கியமான பெண்ணிற்கு வலிநிவாரணி மருந்துகள் கூடத் தேவைப்படுவதில்லை. ஆனால் சில மருத்துவர்கள் பெண்களுக்கு வலி தெரியாமல் இருக்க வேண்டும் என நினைத்து இவ்வகை மருந்துகளைப் பிரசவ நேரங்களில் கொடுத்து விடுகின்றனர். அல்லது அறுவை சிகிச்சையினைத் தேர்வு செய்கிறார்கள் (6).

சுகப்ரசவ முறையை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் கீழ்கண்ட காரணங்கள் மூலம் அறிந்து கொள்க.

தாய்க்கும் பிள்ளைக்கும் ஆரோக்கியம்

பிறப்புறுப்பு வழியாகப் பிரசவம் நடைபெறும்போது மிகக் குறைந்த நேரமே தேவைப்படும். தங்களைப் பாதுகாக்கும் பேக்டீரியாக்களை குழந்தைகள் பிறப்புறுப்பு மூலம் பயணிக்கும்போது பெறுவார்கள். பிரசவ நேரத்தில் அம்னியோ திரவமானது அதிகமாக சுரப்பதால் பெண்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் தீர்கின்றன. அறுவை சிகிச்சை நேரங்களில் ஏற்படும் வலி மற்றும் காயமானது குணமடைய அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

மேலும் அறுவை சிகிச்சை செயல்பாடுகளால் குழந்தைக்கு குறைந்த அளவே ஆக்சிஜன் கிடைக்கிறது. மேலும் குறைந்த இடைவெளி கொண்ட பிரசவ வலிகளால் உங்களுக்கு காய்ச்சல் போன்றவை ஏற்படலாம். அதனால் ஆன்டிபயோடிக் மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.

தாய்ப்பால் சுரக்க உதவுகிறது

சுகப்பிரசவத்தில் தாய்ப்பால் சுரப்பு இயல்பாகவே அதிகரிக்கிறது. ஏனெனில் தனக்கு பிரசவம் நடந்துள்ளதை மூளை அறிந்து அதற்கேற்ப மறுவினை புரிகிறது. அதே சமயம் அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் பிரசவத்தில்  உங்களுக்குத் தரப்படும் வலிநிவாரணி மற்றும் மயக்க மருந்து இவற்றின் பக்க விளைவுகள் தாய்ப்பாலின் வழியே உங்கள் குழந்தைக்கும் பகிரப்படுகிறது. சில குழந்தைகள் பால் குடிக்க மறுப்பது மற்றும் மாறுபட்ட குணங்களைக் காட்டுவது இந்த பக்க விளைவுகளால்தான்.

குழந்தையுடன் ஏற்படும் நேரடி பந்தம்

பிரசவ நேரத்தில் உங்கள் உடல் அதிக விழிப்புணர்வுடன் இருக்கும். அதனால் உங்கள் குழந்தையுடனான பந்தம் மேலும் நேரடியானதாக நிகழ்கிறது. அறுவை சிகிச்சையின் போது தரப்படும் மயக்க மருந்து மற்றும் வலி நிவாரணிகளால் குழந்தைப் பிறப்பின் போது தாயால் நேரடியாக ஈடுபட முடியாமல் போகிறது.

பிரசவத்திற்கு பின்னர் சீக்கிரம் பழையநிலைக்கு உடல் மாறும்

அறுவை சிகிச்சையின் போது தரப்படும் ஊசிகள், மயக்கமருந்து வலிநிவாரணிகள் காரணமாகவும் உடலைக் கிழித்து குழந்தை வெளியே வருவதால் உடலில் ஏற்படும் காயம் காரணமாகவும் உங்கள் உடல்  மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் நேரம் எடுக்கும். அதுவே சுகப்பிரசவம் எனும்போது பெரும்பாலும் மூன்று நாட்களில் நீங்கள் பிள்ளை பெற்ற அசதியில் இருந்து மீண்டு விட முடியும்.

உங்களுக்குத் தன்னம்பிக்கை கிடைக்கிறது

பிரசவ வலியை அனுபவித்த ஒரு பெண் வாழ்வில் ஏற்படும் பல வலிகளைத் துன்பங்களை எதிர்த்து போராட மன அளவில் தயார் ஆகி விடுகிறாள். இது இயற்கை பெண்களுக்கு கொடுத்த தனித்துவமான பரிசாகும் (7).

மருத்துவமனையில் குறைந்த நாட்கள் இருந்தால் போதுமானது

சுகப்பிரசவம் கொஞ்சம் வலிகள் நிறைந்ததுதான் என்றாலும் ஒருமுறை நீங்கள் அனுபவித்து பிள்ளை பெற்று விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான். அதற்குப்பின்னர் உங்களுக்கு எந்த வலிகளும்  ஏற்படாது. சுகப்பிரசவம் என்றால் மருத்துவமனையில் அதிக காலம் இருக்க வேண்டாம். அதே சமயம் அறுவை சிகிச்சை என்றால் அதிக காலங்கள் மருத்துவமனையில் இருக்க நேரிடும்.

பெரிய அறுவை சிகிச்சையில் இருந்து உடல் தப்பிக்கும்

சி செக்ஷன் எனப்படும் பிரசவ அறுவை சிகிச்சையானது உடல் சந்திக்கும் பெரும் அறுவை சிகிச்சைகளில் ஒன்றானதாகும். சுகப்பிரசவம் மூலம் உடலில் கத்தி படுவதில் இருந்து மட்டும் நீங்கள் தப்பிக்கவில்லை அறுவை சிகிச்சைக்கு பின்பான பல்வேறு தொற்று நோய்கள் , ரத்தம் சிந்துதல், ஆயுள்காலக் காயம், மயக்கமருந்தின் பக்க விளைவுகள் வலி எனப் பலவற்றில் இருந்தும் காக்கப்படுகிறீர்கள்.

குழந்தையுடன் நேரடி பந்தம்

தோலும் தோலும் சந்தித்து உரசி வெளிவரும் சுகப்பிரசவத்தில் குழந்தையுடன் நேரடி பந்தம் வெகு சீக்கிரமாகவே ஏற்படுகிறது. இது அறுவை சிகிச்சை முறையில் மூன்றாம் மனிதர்களின் ஸ்பரிசம் மூலம் ஆரம்பிக்கிறது என்பதை நினைவு கொள்ளுங்கள்.

நுரையீரல் சிக்கல்கள் குறையும்

அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னைகள் அதிகமாக இருக்கும். சுகப்பிரசவத்தின் போது குழந்தையை வெளியே தள்ளுவதன் மூலம் உங்கள் நுரையீரல் மற்றும் குழந்தையின் நுரையீரலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறுகிறது. இது ஆரோக்கியமான நுரையீரல் பெற இருவருக்குமே உதவுகிறது.

குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

பிறப்புறுப்பு மூலம் பயணித்து வெளியே வரும் குழந்தைகளுக்கு நல்ல பேக்டீரியா மூலம் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கின்றன (8). இது அவர்கள் நோய் அதிகரிப்பு திறனை அதிகரிக்க உதவி செய்கிறது. அவர்களது ஜீரண மண்டலத்தையும் வலுவாக்குகிறது.

ஆகவே முடிந்த வரை இயற்கையான முறையில் சுகப்பிரசவம் பெறுவதற்கான முயற்சிகளில் நீங்கள் ஈடுபட்டு உங்கள் குழந்தையை இயற்கை முறையில் பெற்றெடுக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்யட்டும். உங்கள் பிரசவம் சுகமாக நடக்க எனது பிரார்த்தனைகள்.

References

1. Sinéad M O’Neill, et al.; Caesarean delivery and subsequent pregnancy interval: a systematic review and meta-analysis
2. Ione Brunt; Normal Birth; Oregon Health Science University
3. When does labor usually start?; The United States Department of Health & Human Services
4. Georgina Stamp; Perineal massage in labour and prevention of perineal trauma: randomised controlled trial
5. Pregnancy and birth: Weight gain in pregnancy; Institute for Quality and Efficiency in Health Care; Cologne, Germany:
6. Mary McCauley, et al.; A survey of healthcare providers’ knowledge and attitudes regarding pain relief in labor for women in Ethiopia
7. Judith A. Lothian; Why Natural Childbirth?
8. Josef Neu and Jona Rushing; Cesarean versus Vaginal Delivery: Long term infant outcomes and the Hygiene Hypothesis
Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles