கர்ப்பகாலங்களில் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும் – 17 உதவிக்குறிப்புகள் உங்களுக்காக

Written by MomJunction MomJunction
Last Updated on

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு மட்டும் அல்லாமல் அவளது குடும்பத்தாருக்கும் முக்கியமான ஒரு காலகட்டம் ஆகும். 10 பிரசவங்களை பார்த்து முடித்த பெரியவர்கள் கூட தன்னுடைய பேத்தியின் கர்ப்ப காலத்தின் போது கொஞ்சம் பதட்டம் காட்டுவார்கள்.

கணவனின் நிலைப்பாடு அதனை விட மோசமானதாக இருக்கும். இப்போதைய நியூக்ளியர் குடும்பங்களில் பெரியவர்கள் இல்லாத காரணத்தால் சரியான முறையான கர்ப்ப கால அறிவுரைகள் கிடைக்காமல் பெண்கள் தவிக்கின்றனர். அவர்களுக்காகவே மிக சுலபமான முறையில் அவர்கள் எதனை செய்யலாம் எதனை செய்ய கூடாது என்பதை 17 குறிப்புகளாக மாற்றி மிக எளிமையாக கொடுத்திருக்கிறோம்.

இதனை பின்பற்றி உங்கள் கர்ப்ப கால மன அழுத்தங்களை குறைத்து மிக எளிமையாக பிரசவத்தை அடையுங்கள்.

1. காய்ச்சலுக்கான வாக்சின்களை போடுங்கள் 

கர்ப்பமான பெண்கள் தங்களுக்கான ஃப்ளு காய்ச்சல் வேக்சினேஷனை போட்டுக் கொள்ளலாம். இதனால் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு எதுவும் நேராது. ஃப்ளு காய்ச்சல் ஊசி என்பது உடனடியாக உங்களுக்கு காய்ச்சலை தோற்றுவிக்காது. அதற்கான வைரஸ் உங்கள் உடலில் நுழையும்போது மட்டுமே அதனை எதிர்த்து போராடும்.

அதைப் போலவே இந்த ஃப்ளு காய்ச்சல் ஊசி உங்களை மட்டும் அல்லாமல் உங்கள் வயிற்றில் வாழும் குழந்தையையும் பாதுகாக்கும்(1).

2. அதிகமாக காபி குடிக்காதீர்கள்

கர்ப்ப காலங்களில் அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள். ஒருநாளைக்கு ஒருமுறை போதுமானது. காபியில் உள்ள caffine உங்கள் நஞ்சுக்கொடி மூலமாக உள் நுழைந்து குழந்தையின் இதய துடிப்பை அதிகரிக்கும் (2).

பால் கலக்காத காபி உங்களுக்கு .கொஞ்சம் நன்மை தரும்.

3. மல்டிவிட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்

சமசீரான உணவு உட்கொள்வது கர்ப்ப காலத்தில் அவசியமான ஒன்றாகும். உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் இந்த சமசீர் உணவு போய் சேருவதால் பலவித நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்.

என்னதான் உணவு சாப்பிட்டாலும் ஒரு சில விட்டமின்கள் கர்ப்ப நேரங்களில் உங்களுக்கு கூடுதலாக தேவைப்படும். அது போலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து ஆகியனவாகும். இந்த விட்டமின்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அதனால் அதனை உங்கள் குழந்தைக்கு நீங்கள் தர இந்த மல்டிவிட்டமின் மாத்திரைகள் உதவுகின்றன (3).

ஒரு நாளைக்கு ஒரு மல்டிவிட்டமின் மாத்திரைக்கு மேல் நீங்கள் எடுக்க கூடாது.

4. புகை பிடிக்காதீர்கள்

கர்ப்ப நேரங்களில் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும் மற்றும் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முந்தைய இந்தியாவில் இப்படியான பிரச்னைகள் இருந்ததில்லை. ஆனால் இன்றைய இந்தியாவில் பெண்களும் புகைபிடிக்கும் வழக்கம் அதிகமாகி இருக்கிறது. அதனால் கர்ப்ப நேரங்களில் புகைபிடிப்பதை தவிர்ப்பது சரியானது. இல்லையெனில் பல பின்விளைவுகள் ஏற்படலாம் (4).

5. அதிக நேரம் தூங்குங்கள்

மாறும் ஹார்மோன் அளவுகள், பதட்டம், மற்றும் இனம் புரியாத பயம் காரணமாக கர்ப்ப நேரங்களில் பெண்களுக்கு தூக்கம் பாதிக்கப்படலாம். அதிலும் 9வது மாதத்தில் தூக்கம் என்பது கேள்விக்குறிதான். அந்த நேரங்களில் உங்களுக்கான தூக்கம் என்பது மிக முக்கியமானது.

தேவையான நேரங்களில் ஓய்வெடுப்பது அவசியமானது. சின்ன சின்ன தூக்கங்கள் உங்களை புத்துணர்வோடு வைக்கும். மயக்கம் என்பது கர்ப்ப கால அறிகுறிகளில் ஒன்று. அதற்கு அர்த்தம் உங்கள் உடல் அதிக ஓய்வை விரும்புகிறது என்பதே ஆகும் (5).

தேவையான ஓய்வை உடலுக்கு கொடுங்கள்.7 முதல் 9 மணி நேரம் கட்டாய உறக்கத்துக்கு உடலை தயார் செய்யுங்கள்.

6. மது அருந்த வேண்டாம்

மது உங்கள் உடலுக்கு பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அது கர்ப்ப காலங்களில் மேலும் அதிகரிக்கலாம்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள்  fetal alcohol syndrome (FAS) என்கிற பிரச்னையுடன் பிறக்கின்றன என்கிறது ஆய்வு (6).

இதன் அறிகுறிகள் என்ன என்றால்

  • பிறக்கும் போது எடை குறைதல்
  • கற்றல் குறைபாடு
  • நடத்தை குறைபாடுகள்
  • வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தாமதம்

போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகள் பிறப்பார்கள். ஒரு சிறு அளவு மது அருந்தினாலும் இந்த பாதிப்பு வரும் என்கிறது மருத்துவம்

7. உடற்பயிற்சி செய்யுங்கள்

முன்பெல்லாம் ஒரு பெண் கர்ப்பிணி ஆனால் அவள் தன்னுடைய விரல்களை கூட தூக்க விடாமல் குடும்பத்தார் தாங்கி பிடிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் கர்ப்பமான பெண்ணுக்கு உடற்பயிற்சி என்பது அவசியம் என எல்லோருக்கும் தெரிகிறது.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் தூக்கமின்மை, தசை வலிகள் , அதிகமான உடல் எடை மற்றும் மனநிலை ஸ்திரமின்மை போன்ற பாதிப்புகள் குறையும் (7). மருத்துவரின் ஆலோசனையுடன் தகுந்த உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.

8. பச்சை இறைச்சி சாப்பிட வேண்டாம்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருபோதும் சரியாக வேக வைக்காத உணவுகளை உண்ண வேண்டாம். பச்சை இறைச்சி அல்லது பாதி வேக வைத்த இறைச்சி அல்லது முட்டை போன்றவை பிறக்கும் குழந்தைகளுக்கு பலவித நோய்களை உருவாக்கும் ஆபத்து உண்டு. லிஸ்டீரியோசிஸ், உணவு விஷமாக மாறுதல் போன்ற பல தவறுகள் இதனால் ஏற்படலாம் (8).

இதனால் சில சமயம் அபார்ஷன் போன்ற பல கர்ப்ப சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். ஆகவே தவிர்த்து விடுங்கள்.

9. கடல் உணவுகளை அதிகம் உண்ணுங்கள்

கடல் உணவுகள் தன்னுள்ளே பல வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை கொண்டிருக்கிறது. ஒமேகா 3 அமிலங்கள், ஜின்க் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிலே நிறைந்து இருக்கின்றன. ஆகவே கடல் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.

சில கடல் உணவுகளில் மெர்குரி அதிகமாக இருக்கும். அதன் தன்மை தெரிந்து அவற்றை தவிர்த்து விடுங்கள் (9).

10. டெலி இறைச்சிகளை தவிருங்கள்

டெலி இறைச்சி எனப்படும் சில பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை உங்கள் கர்ப்ப காலங்களில் தவிர்ப்பது நல்லது. ஹாட் டாக் , சாசேஜ், ஸ்மோக்கி சால்மன் போன்றவை இதில் அடங்கும். அதில் நச்சுத்தன்மை அதிகமாக இருக்கும். ஆகவே அவற்றை கர்ப்ப நேரத்தில் உண்ண வேண்டாம்.

மெல்லிய அகன்ற துண்டுகள் ஆக்கப்பட்ட இறைச்சிகள் பதப்படுத்தப்பட்டிருந்தாலும் சில பேக்டீரியாக்கள் அங்கே வளரும். நன்றாக வேக வைத்து சமைத்து சாப்பிட்டால் ஒழிய அவை அழியாது. அதைப் போலவே பேஸ்சுரைஸ் செய்யப்பட்ட சீஸ் மற்றும் பால் உணவுகளை உண்ணாமல் தவிர்த்து விடுங்கள் (10).

11. உடலுறவு கொள்ளுங்கள்

கர்ப்பமான நேரங்களில் குழந்தைக்கு ஏதாவது ஆகலாம் என்கிற பயம் ஆண் பெண் இருவருக்குமே உண்டு. ஆனால் கர்ப்ப நேரங்களில் உடல் உறவு கொள்ளாமல் இருந்து விட்டால் பிரசவ நேரங்கள் கடினமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உங்கள் பனிக்குடம் உடையும் வரை உடலுறவு கொள்வது தவறில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கென சில குறிப்பிட்ட நிலைகள் உள்ளன. அதனை பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம் (11).

12. கலப்படமான பால் பொருள்களை உண்ண வேண்டாம்

கேல்சியம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அத்தியாவசியம் ஆனது என எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த கேல்சியம் எங்கிருந்து பெறப்படுகிறது என்பதில் அம்மாக்கள் கவனம் வைக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்களுக்கு பச்சையான பாலை அருந்த கொடுக்க கூடாது. பாலை கொதிக்க வைப்பதால் மட்டுமே அதில் உள்ள பேக்டீரியாக்கள் அழிகின்றன . அதன் பின்னரே கர்ப்பிணிகள் பாலை அருந்தலாம் (12).

13. யோகா செய்யுங்கள்

கர்ப்ப காலங்களில் உடல் மற்றும் மனதின் சமநிலை மிக மிக முக்கியமானது. ஆகவே யோகா செய்வது மட்டுமே இதற்கான சரியாக வழியாக இருக்க முடியும். கர்ப்பிணி பெண்களுக்கென்றே சில யோகா பயிற்சி நிலையங்கள் இருக்கின்றன.

நீங்கள் அவர்களை அணுகலாம். அவர்கள் கர்ப்ப காலத்திற்கு தகுந்த யோகா பயிற்சிகளை சொல்லி கொடுப்பார்கள். அல்லது உங்கள் மருத்துவரின் ஆலோசனையை நீங்கள் நாடலாம் (13).

14. சூடான பாத் டப் அல்லது சானா போன்றவற்றை உபயோகிக்காதீர்கள்

தாய்மை அடைய போகும் பெண்களுக்கு பாத் டப்பில் ஹாட் வாட்டர் குளியல் அல்லது நீராவி குளியல் போன்றவை கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கர்ப்பமடைந்த முதல் மூன்று மாதங்களில் இதனை பயன்படுத்தினால் அது கரு சிதைவை ஏற்படுத்தலாம். வெந்நீரில் உடலை ஊற வைத்து குளிப்பது என்பது உங்கள் வெப்பநிலையை அதிகரிப்பதோடு குழந்தையின் வெப்பநிலையையும் பாதிக்கும். பிறப்பு குறைகளோடு உள்ள குழந்தைகள் பிறக்கலாம் (14).

15. உடல் எடையை ஸ்மார்ட்டாக அதிகரியுங்கள்

கர்ப்பமான பெண்கள் இரண்டு பேருக்கு தேவையான உணவை உட்கொள்ள வேண்டும் என்பது பொதுவான சொல். ஆனால் அதற்காக நீங்கள் நினைத்ததை எல்லாம் சாப்பிட்டு கொண்டிருக்கலாம் என்று அதனை நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.

கர்ப்ப நேரங்களில் அதிகமான உடல் எடை என்பது சில சமயங்களில் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆபத்தாக முடியலாம். ஒரு நாளைக்கு 100 கலோரி அதிகமாக நீங்கள் எடுத்துக் கொள்வதே உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு போதுமானது (15).

16. பூனையின் எச்சங்களை சுத்தம் செய்ய வேண்டாம்

பூனை உங்களுக்கு பிடித்த மிருகமாக இருக்கலாம். உங்கள் நண்பனுடன் நீங்கள் விளையாடுங்கள். பின்னர் கைகளை சுத்தப்படுத்தி விடுங்கள். ஆனால் பூனையின் அசுத்தங்களை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டாம்.

பூனையின் அசுத்தத்தில் மில்லியன்கணக்கான பேக்டீரியாக்களும் ஒட்டுண்ணிகளும் நிறைந்திருக்கும். அவற்றை நீங்கள் சுத்தம் செய்யும்போது தெரியாமல் உங்கள் உடலுக்குள் போய் விட்டால்  கருச்சிதைவை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம். அல்லது வலிப்பு நோய் கொண்ட குழந்தைகள் பிறக்கலாம் (16).

17. உங்கள் பல் மருத்துவரை சந்தியுங்கள்

பல் மருத்துவர் என்பவர் பல் வலி நேரங்களில் மட்டுமே நினைவுக்கு வருபவர். அதுவும் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குணமாகி விட்டால் அவரை நாம் சந்திக்க அவசியமே இல்லை என்று நினைத்து விடுகிறோம்.

தாய்மை அடைய போகும் பெண்கள் தங்களுடைய பற்களின் சுத்தம் மற்றும் பேக்டீரியாக்களை நீக்குதல் போன்றவைகளை சரியாக செய்வது பிறக்க போகும் குழந்தைக்கு நன்மை தரும். ஆகவே கர்ப்பிணி பெண்கள் இடைவெளி விட்டு பல் மருத்துவரிடம் செல்வது நல்லது (17).

17 ஆதாரங்கள்

Momjunction எப்போதும் தன்னுடைய கட்டுரைகளை தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. மூன்றாம் நிலை ஆதாரங்களை முடிந்தவரை தவிர்க்கிறது. இந்த கட்டுரையின் உண்மைத்தன்மைக்கான 17 ஆதாரங்களும் அதன் இணைய இணைப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles