மாதவிடாய் சுழற்சி தாமதப்படுவதற்கு முன் ஏற்படும் கர்ப்பகால அறிகுறிகள்

Written by Soundarya Subbaraj
Last Updated on

மண்ணில் பெண்ணாய் ஜனனம் எடுத்த ஒவ்வொரு பெண்ணுக்கும், அவள்தம் வாழ்நாளில் ஏற்படும் மிகப் பெரிய ஆசை என்ன என்றால், அது கர்ப்பம் தரித்து தனக்கு என ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதுதான். பெண்கள் பிறந்து, சிறுமிகளாய் வளர்ந்து, பின் பூப்படைதல் மூலம் குமரியாய் மாறி, அடுத்து ஒரு ஆணுக்கு மனைவியாகி, இறுதியாக ஒரு குழந்தைக்கு அன்னை என்னும் ஸ்தானத்தை அடையும் நேரத்தில்தான், உண்மையான மகிழ்ச்சியை  அடைகின்றனர்.

பெண்கள் தங்களது வாழ்வில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்தாலும், அவர்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது தாய்மை என்னும் உணர்வே ஆகும். கருத்தரிக்க முயன்று கர்ப்பம் அடைந்து விட்டோமா என்று அறியும் தவிப்பு ஒவ்வொரு பெண்ணிற்கும் பல மடங்கு இருக்கும். மாதவிடாய் தாமதம் ஆவதற்கு கர்ப்பம் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று எண்ணி குழம்பும் பெண்கள் பலர். பெண்கள் சந்திக்கும் இந்த குழப்பத்தை போக்க, மாம்ஜங்க்ஷன்(MomJunction)  மாதவிடாய் சுழற்சி தாமதப்படுவதற்கு முன் ஏற்படும் கர்ப்பகால அறிகுறிகளை ஒரு விரிவான பதிப்பாக தொகுத்து, இந்தப் பதிப்பில் வழங்கியுள்ளது; படித்து அறியுங்கள்.

மாதவிடாய் சுழற்சி தாமதப்படுவதற்கு முன் ஏற்படும் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் அறிகுறிகள்

பெண்களில் பலர் திருமணத்திற்கு முன் அல்லது பின், உடலுறவு பின் மாதவிடாய் சுழற்சி தாமதமானால் தான் அதாவது மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போனால் தான் கர்ப்பம் ஏற்படும், அது தான் கர்ப்பத்தை உணர்த்தும் அறிகுறி என்று நினைத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் அது உண்மை அல்ல, இங்கு மாதவிடாய் சுழற்சி தாமதப்படுவதற்கு முன் ஏற்படும் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

1. கரு பதித்தல் உதிரப்போக்கு மற்றும் வயிற்றுப்பிடிப்பு

பெண்களுக்கு உடலுறவு ஏற்பட்ட பின், மாதவிடாய் சுழற்சி தினத்திற்கு  முன்பான ஓரிரு வாரங்களில் லேசான உதிர வெளிப்பாடு அல்லது உதிரப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது வயிற்றுப்பிடிப்பு வலி தோன்றினாலோ அவர்கள் கர்ப்பம் தரிக்க உள்ளார்கள் என்று அர்த்தம்!ஆனால் இது மாதிரியான அறிகுறிகள் அனைவருக்கும் ஏற்படுவதில்லை;ஒருவேளை இந்த அறிகுறிகள் உடலில் தோன்றினால், விரைவில் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது எனப் பொருள் என்பதை உணர வேண்டும்.

அண்டம் விடுபடுதலுக்கு ஆறு அல்லது ஏழு நாட்கள் முன்பு, கரு பதித்தல் நிகழ்வு கருவறையில் நடைபெறும்; ஒரு சரியான மாதவிடாய் சுழற்சியில் அதாவது 28 நாட்களுக்கு பின் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் 20 அல்லது 24 ஆம் நாள் இந்த கரு பதித்தல் பணிகள் ஏற்படலாம் (1).

கரு பதித்தலின் பொழுது ஏற்படும் உதிரப்போக்கு மிக மெல்லியது; மிக அரிதானது. இச்சமயத்தில் வயிற்றுப்பிடிப்பு வலி தோன்றலாம்.

2. அடிப்படை உடல் வெப்பநிலை

பெண்கள் உடலில் மாதவிடாய்க்கு முன் அடிப்படை உடல் வெப்பநிலை சற்று உயரும்; அதாவது பொதுவாக பெண்களின் உடல் வெப்பநிலை 97.0 அல்லது 98.0 பாரன்ஹீட் என்ற அளவில் இருக்கும் (2). ஆனால், மாதவிடாய்க்கு முன் இந்த வெப்பநிலை 0.5-1 பாரன்ஹீட் என்ற அளவில் உயரும்; இந்த வெப்பநிலை உயரவில்லை எனில், அது கருத்தரிப்பு ஏற்பட்டிருப்பதை குறிக்கும்.

தினசரி உடலின் வெப்பநிலையைப் பரிசோதித்து வரும் பெண்களால், இந்த மாற்றத்தை உணர முடியும்; இம்மாற்றத்தை உணர்வதன் மூலம் கருத்தரிப்பு ஏற்படப்போவதை அறிய முடியும்.

3. புண்ணான, முதிர்ந்த, கனத்த மார்பகங்கள்

பொதுவாக பெண்களின் உடலில் கருத்தரிப்பு ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டால், முதலில் மாற்றம் அடைவது வெளி உறுப்பு ஆகும். கருத்தரிப்பிற்கான மாற்றங்கள் பெண்களின் உடலில் நிகழ்கையில், தாய்ப்பால் சுரப்புக்காக மார்பகத்தை தயார்படுத்தும் பணிகளும் இணைந்து நடைபெறும்.

அப்படி நிகழும் மாற்றங்களால், பெண்களின் மார்பகங்கள் புண்களுடனோ, பெரிதாகியோ காணப்படலாம்; மேலும் மார்பக முலைக் காம்புகள் மற்றும் அதனை சுற்றிய பகுதியின் நிறம் அடர்ந்த கருப்பு நிறத்திற்கு மாறுபடும். இந்த மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சி தாமதப்படுவதற்கு முன்னான ஓரிரு வாரங்களிலேயே ஏற்படும்.

மார்பகத்தின் இம்மாற்றங்களை கவனித்து வந்தால், பெண்களால் மாதவிடாய் சுழற்சி தாமதப்படும் முன்னரே, கருத்தரிப்பு குறித்த விவரத்தை அறிந்து கொள்ள முடியும் (3).

4. சோர்வு

கரு உருவாக பெண்களின் உடலில், பல வித ஹார்மோன் மாற்றங்கள் நடைபெறும்; மேலும் அதிகப்படியான இரத்தம் சுரக்கப்படும். இந்த மாற்றங்களால் பெண்கள் களைப்பாக உணரலாம்; இம்மாற்றங்கள் உடலின் உட்பகுதியில் நிகழ்வதால், காரணமின்றி களைப்பு ஏற்படுவதாக தோன்றும்.

இந்த களைப்பு உணர்வை மட்டும் கொண்டு, கருத்தரிப்பு நிகழ்ந்துவிட்டது என்று முடிவு செய்யக்கூடாது; இதனுடன் பிற மாற்றங்களும் உடலில் நிகழ்ந்திருந்தால், கருத்தரிப்பு நிகழ வாய்ப்புண்டு. வெறும் களைப்பு மட்டும் தோன்றினால், அது இரத்த சோகை, ஹைப்போதைராய்டிசம் போன்ற நோய்களின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

பெண்கள் இவ்வாறு ஏற்படும் களைப்பை தவிர்க்க வைட்டமின் மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையுடன் உட்கொள்ள வேண்டும்; காஃபின் போன்ற உணவுகளைத் தவிர்த்து, உடலுக்கு போதுமான அளவு ஓய்வு கிட்டும்படி உறங்க வேண்டும்; இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது கருத்தரிப்பால் பெண்களின் உடலில் ஏற்படும் களைப்பைப் போக்க உதவும்.

5. குமட்டல்

குமட்டல் அல்லது காலை பலவீனம் என்பது பொதுவாக அனைத்து பெண்களிலும் ஏற்படக்கூடிய ஒரு முக்கிய அறிகுறியாகும். இது பெண்களில் மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போகும் முன் அல்லது பின் அல்லது அதையொட்டிய காலங்களில் மற்றும் கருத்தரிப்பிற்கு பின் என அனைத்து காலங்களிலும் தோன்றக்கூடிய அடிப்படை அறிகுறியாகும்.

இது பெரும்பாலும் 75% பெண்களுக்கு கர்ப்பத்தின் முன்னதான கால கட்டத்தில் ஏற்பட்டு, கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலம் வரை தொடர்ந்து ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் சில பெண்களுக்கு இந்தக் குமட்டல் உணர்வு கர்ப்ப காலம் முழுக்க தொடர வாய்ப்புண்டு.

கருத்தரிப்பு காரணமாக ஏற்படும் குமட்டல் காலை நேரங்களில் அதிக வீரியத்துடன் இருக்கும்; மேலும் மற்ற நேரங்களில் வீரியம் குறைந்து காணப்படும். இந்த குமட்டல் உணர்வால், பெண்களுக்கு சோர்வு, களைப்பு, பலவீனம் போன்ற உணர்வுகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படும்.

இந்தக் குமட்டல் உணர்வை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருப்பது ‘HCG’ என்னும் ஹார்மோன் ஆகும்; சில பெண்களுக்கு இந்த உணர்வு கர்ப்பத்தின் பத்து மாதங்களிலும் தொடர்ந்து ஏற்படலாம், சிலருக்கு முதல் மூன்று மாதங்களில் மட்டும் ஏற்படலாம்.

6. வீக்கம் மற்றும் இறுக்க உணர்வு

பெண்களில் கருத்தரிப்பு காரணமாக ஏற்படும் உள்ளுறுப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், அவர்களின் உடலில் வீக்கம் மற்றும் இறுக்க உணர்வுகள் ஏற்படலாம்; குழந்தையைத் தாங்க வயிற்றை தயார்ப்படுத்தும் ஹார்மோன்கள், வயிறு மற்றும் அதை சுற்றிய பகுதிகளிலோ அல்லது பாதங்களிலோ வீக்கம் மற்றும் இறுக்க உணர்வை ஏற்படுத்தலாம் (4).

இந்த வீக்கம் மற்றும் இறுக்க உணர்வு காரணமாக பெண்களின் உடலில் அடிக்கடி ஏப்பம்,வாயு தொல்லை அதாவது காற்று பிரித்தெடுத்தல் நிகழ்வு ஏற்பட வாய்ப்புண்டு. இதை தடுக்க செய்யக்கூடிய செயல் ஒன்றும் இல்லை; இந்த மாற்றங்கள் அனைத்தும் கர்ப்பத்தின் காரணமாக உண்டான ஹார்மோன்களால் ஏற்படுபவை ஆகும்.

இதனால், உடலின் செரிமான உறுப்புகளில் கோளாறுகள் நேரிடலாம்; ஆகையால் உணவுகளை ஒரேயடியாக உண்ணாமல், சிறு சிறு பாகங்களாக பிரித்து, மெதுவாக உண்ணுங்கள்.

7. சிறுநீர் கழிக்கும் உணர்வு

பெண்களின் உடலில் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில், மாதவிடாய் தள்ளிப்போகும் முன் அல்லது அதற்கு பின் அதிகப்படியான சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும்; இதற்கு பெண்களின் உடலில் கருத்தரிப்பு காரணமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தான் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.

பெண்களுக்கு இந்த சிறுநீர் கழிக்கும் உணர்வு இரவில் அதிகம் ஏற்படும்; கருத்தரிப்பிற்காக பெண்களின் உடலில் உருவாகும் அதிகப்படியான இரத்த உருவாக்கம், அவர்தம் சிறுநீரகங்களில் வடிகட்டப்படும் பொழுது, அது சிறுநீர் உற்பத்தியை உண்டாக்கி விடுகிறது. இதனால்தான் பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை உருவாகிறது; பெண்களின் உடலில் ஏற்படும் இந்த அதிகப்படியான சிறுநீர் கழித்தல், அவர்தம் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் பெண்கள் அதிக நீரினைப் பருக வேண்டிய அவசியம் ஏற்படும்.

8. உணவின் மீது வெறுப்பு

பெண்களின் உடலில் கர்ப்பம் காரணமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், அவர்களுக்கு சில அல்லது பல உணவுகளின் மீது வெறுப்பு ஏற்படலாம்; பெண்களுக்கு மிகவும் பிடித்த உணவுகள் கூட, இந்தக் கால கட்டத்தில் பிடிக்காமல் போய் விடலாம். பெரும்பாலும், அதாவது 85% பெண்களுக்கு கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் உணவுவெறுப்பு முதல் மூன்று மாத காலகட்டம் வரை நீடித்து, பின் சாதாரணமாகி விடும்.

ஒரு சில உணவுகளின் மீது வேண்டுமானால் அந்த வெறுப்பு கர்ப்பம் காலம் முழுக்க தொடரலாம். இந்த உணவின் மீதான வெறுப்பை பெண்களுக்கு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பது, ‘புரோஜெஸ்டிரான்’ என்னும் ஹார்மோன் ஆகும்.

9. தலை சுற்றல்

தலை சுற்றல் என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு சாதாரண மாற்றமே! இந்த மாற்றம் கர்ப்பத்தின் முன்பாக ஏற்பட்டு, கர்ப்பத்தின் முதல் மூன்று காலங்கள் வரை தொடர வாய்ப்பு உண்டு. இந்தத் தலை சுற்றல் பெண்களுக்கு ஏற்பட காரணமாக இருப்பது, அவர்தம் உடலில் ஏற்படும் குறைவான இரத்த அழுத்தம் ஆகும்.

பெண்களின் உடலில் கருத்தரிப்பு காரணமாக நிகழும் பல்வேறு மாற்றங்களால், அவர்தம் இரத்த அழுத்தம் குறையலாம்; இது தலை சுற்றலை ஏற்படுத்தலாம்.

ஆனால், சில சமயங்களில், சில நபர்களுக்கு பிறப்புறுப்பில் உதிரப்போக்கு, அடி வயிற்று வலி ஆகிய மாற்றங்களுடன், தலை சுற்றல் ஏற்பட்டால் அது இடமாற்று கர்ப்பத்தை குறிக்கும்; இது மிகவும் சிக்கலானது, இதற்கு மருத்துவப் பரிசோதனை மிகவும் அவசியம்.

10. மன நிலை  மாற்றங்கள்

கருத்தரிப்பு நிகழ்விற்காக பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அவர்களில் மன நிலை மாற்றங்களை ஏற்படுத்தலாம்; இந்த ஹார்மோன்கள் பெண்களின் மூளையில் காணப்படும் ‘நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்’ செல்களைப் பாதிக்கலாம். இதனால் திடீர்க் கோபம், அழுகை போன்ற மனநிலை மாற்றங்கள் பெண்களில் ஏற்படும். இந்த நிலையை சரி செய்ய பெண்கள் தங்களது கணவர் அல்லது நண்பரிடம் கலந்துரையாடி மன நிலையை மேம்படுத்த முயலலாம்.

பெண்களின் மன நிலை மாற்றங்களை உற்றார், உறவினர் மற்றும் குடும்பத்தினர் புரிந்து கொண்டு, அவர்களுக்கு அந்தச் சமயத்தில் ஆறுதலாக இருக்க முயல வேண்டும்; கர்ப்பம் தரித்து இருக்கும் பெண்களின் மனம் கஷ்டப்படும் வகையில் எந்த நிகழ்வுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது குடும்பத்தினரின் கடமை ஆகும் (5).

11. மலச்சிக்கல்

கருத்தரிப்பிற்காக பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அவர்களில் மலச்சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு; புரோஜெஸ்டிரான் ஹார்மோன் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாகத் திகழ்கிறது. கருத்தரிப்பிற்கான ஹார்மோன் மாற்றங்கள் மலக்குடல் பகுதியில் அசௌகரியத்தை விளைவிக்க வாய்ப்புண்டு. தொடர்ந்து பெண்களில் மலச்சிக்கல் ஏற்பட்டால், அவர்கள் கருத்தரிப்பை உறுதி செய்யும் பரிசோதனையை மேற்கொள்வது நன்று.

பெண்களுக்கு உடலில் ஏற்படும் மலச்சிக்கல் காரணமாக, அவர்களுக்கு உணவின் மீது வெறுப்போ அல்லது உணவை உட்கொள்ளும் தன்மையிலும்,அளவிலும் பாதிப்போ ஏற்படலாம். கர்ப்பிணிப் பெண்கள் சரியாக உணவு உட்கொள்ளவில்லை எனில், அது கருவின் வளர்ச்சியைப் பாதிக்கும். ஆகையால், பெண்கள் இந்தப் பிரச்சனைக்கு உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, இந்தப் பிரச்சனையைக் கடந்து வர வேண்டியது மிக முக்கியம் ஆகும் (6).

12. தலைவலி மற்றும் முதுகு வலிகள்

பெண்களின் உடலில் கருத்தரிப்பு மாற்றத்தால் ஏற்படும் குறைவான சர்க்கரை அளவு, அவர்தம் உடலில் தலைவலியை ஏற்படுத்தும்; தொடர்ந்து தலைவலி ஏற்பட, கருத்தரிப்பை உறுதிப்படுத்த செயல்படும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் போன்ற ஹார்மோன்கள் காரணமாக விளங்குகின்றன (7).

மேலும் கருத்தரிப்பு உண்டான பின், உருவாக இருக்கும் கருவைத்  தாங்க பெண்ணின் உடலை தயார்ப்ெபடுத்தும் முறைகளால், பெண்களுக்குக் கீழான முதுகுவலி ஏற்படலாம்; மேலும் கருத்தரிப்பினால் ஏற்படும் அறிகுறிகளான கரு பதித்தல், மலச்சிக்கல், களைப்பு போன்றவையும் பெண்களில் ஏற்படும் முதுகு வலிக்கு காரணிகள் ஆகும்.

இவ்வாறு உடலில் ஏற்படும் வலிகளுக்கு, மருத்துவ ஆலோசனையை மேற்கொண்டு, மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரை, மருந்து மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நல்லது.

13. அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு

கருத்தரிப்பு நிகழ்வால் ஏற்படும் மாற்றத்தால் சில பெண்களுக்கு அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு மற்றும் உமிழ்நீர் வெளிப்பாடு மாற்றம் ஏற்படும்; இதற்கு பெண்களின் உடலில் உண்டாகும் நெஞ்சு எரிச்சல் மற்றும் காலை பலவீனம் காரணமாகத் திகழ்கின்றன.

பெண்களின் உடலில் குமட்டல் ஏற்பட்டால், அதனால் வாயில் ஏற்படும் உமிழ்நீரைப் பெண்களால் உமிழவே முடியும்; மேலும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும் அமில மாற்றத்தால், பெண்களில் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு ஏற்படுகிறது. பெண்களின் உடலில் ஏற்படும் உமிழ்நீர் சுரப்பு அவர்தம் உடல் நிலையை சம நிலையில் வைக்க உதவும் (8).

14. வாயில் உலோக சுவை

கருத்தரிப்பிற்காக பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், அவர்தம் வாயில் உலோக சுவை ஏற்படும்; இதன் காரணமாக பெண்களுக்கு சில உணவுகளின் மீது, சில வாசனைகளின் மீது வெறுப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த மாற்றம் சில பெண்களுக்கு கர்ப்ப காலம் முழுவதும் தொடரலாம்; சிலருக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலங்கள் வரை மட்டுமே ஏற்படலாம்.

இவ்வாறு வாயில் ஏற்படும் உலோக சுவையால், பெண்களால் சரியாக உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்; இதனால் கருவின் வளர்ச்சி மற்றும் பெண்டிரின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ஆகையால், பெண்கள் வாயில் ஏற்பட்டு இருக்கும் இந்த அசௌகரிய சுவையைப் போக்க, மருத்துவ ஆலோசனையின் வாயிலாக நல்லதொரு வழியை கண்டறிந்து, இப்பிரச்னையில் இருந்து மீண்டு வர வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

15. அதிகப்படியான தாகம்

கருத்தரிப்பிற்கு தேவையான அதிகப்படியான இரத்தம் பெண்களின் உடலில் உற்பத்தி செய்யப்படுவதால், பெண்களுக்கு அதிகமான தாகம் ஏற்படும். பெண்களின் உடலில் கருத்தரிப்பு ஏற்பட்டிருந்தால், அதிகப்படியான சிறுநீர் வெளிப்பாடு நிகழும்; இதனால் கூடப் பெண்களுக்கு அதிகமான தாக உணர்வு ஏற்படும்.

16. அதிகப்படியான பசி

கருத்தரிப்பினால் ஏற்படும் அறிகுறிகளான வாந்தி, குமட்டல் போன்றவற்றின் காரணமாக பெண்களின் உடலில் அதிகப்படியான பசி உணர்வு ஏற்படலாம்; ஊறுகாய், மாங்காய் போன்ற உணவுகளை உட்கொள்ளும் பேரார்வம் எழலாம். கருத்தரிப்பினால் ஏற்படும் களைப்பு உணர்வும் பசியை ஏற்படுத்தலாம்; ஆகையால், உடலுக்கு தேவையான அளவு மட்டும் உண்ண முயற்சிக்க வேண்டியது அவசியம்.இது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

கருத்தரிப்பு காரணமாக பல பெண்களுக்கு அதிகப்படியான பசி உணர்வு ஏற்படுவது போல், சில பெண்களுக்கு பசியின்மை உணர்வு ஏற்படலாம். அந்நிலையில் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் தங்களுக்குள் வளர இருக்கும், வளரும் கருவின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, உடலிற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவுகளை உண்ண வேண்டியது மிகவும் அவசியம்.

17. மூச்சு விடுவதில் காணப்படும் சிரமம்

பொதுவாக பெண்கள் கருத்தரிப்பு மாற்றங்களை சந்தித்து வந்தால், அச்சமயம் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் ஏற்பட வாய்ப்பு உண்டு; இது எதனால் ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால், கருத்தரிப்பு நிகழ்ந்த பெண்ணுக்குள் உருவாகும் கரு சுவாசிக்க கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படும்.

ஆகையால், பெண்கள் சுவாச வெளிப்பாடு மற்றும் உள்ளிழுப்பில் சிரமத்தை சந்திக்கலாம்; இந்த மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம், ஆக்சிஜன் தேவை போன்றவை குழந்தை வளர வளர அதிகரிக்கலாம். கர்ப்ப காலம் முழுவதும் இந்தப் பிரச்சனை தொடர வாய்ப்பு உண்டு; ஆகையால், பெண்கள் தளர்வான ஆடை அணிவது, மெதுவாக சுவாசிப்பது, அமரும் நிலை, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், மூச்சு பிரச்சனையில் ஏற்படும் சிரமத்தை குறைத்து, சீரான சுவாசத்தை பெற முடியும். மேலும் பெண்கள் மூச்சு விடுவதில் சந்திக்கும் சிரமத்தை குறைக்க, பிராணாயாம போன்ற மூச்சு பயிற்சி யோகாக்களிலும் கவனம் செலுத்தலாம்; இவை பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைப் பயக்கும்.

இவ்வாறு மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமத்தை மட்டும் கொண்டு கர்ப்பத்தை உறுதி செய்யக் கூடாது; முறையான கருத்தரிப்பு உறுதிப்படுத்தும் பரிசோதனை, மாதவிடாய் தள்ளிப்போதல் ஆகியவற்றை கொண்டே கருத்தரிப்பினை உறுதி செய்ய இயலும்.

மாதவிடாய் சுழற்சி  சமயம் உருவாகும்  அறிகுறிகளுக்கும் கர்ப்ப கால அறிகுறிகளுக்கும் என்னென்ன வேற்றுமைகள்?

கருத்தரிப்பால், பெண்களில் ஏற்படும் கர்ப்ப கால மாற்றங்கள் ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுபடும்; ஆனால், பெண்களில் குமட்டல், களைப்பு, உறக்கமின்மை, வீக்கம், மார்பக மாற்றங்கள் போன்ற மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு முன்னான ஏழு அல்லது 10 நாட்களில் ஏற்படும். கிட்டத்தட்ட மாதவிடாய் சுழற்சி  சமயம் உருவாகும்  அறிகுறிகளும் கர்ப்ப கால அறிகுறிகளும் ஒன்று போலவே தோன்றும்.

மாதவிடாய் சுழற்சி ஏற்பட இருந்தால், பெண்களின் உடலில் அடிக்கடி சிறுநீர்க் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும்; மேலும் பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளிப்படுதல், பிறப்புறுப்பில்  மாற்றம் ஏற்படுதல், அடிப்படை உடல் வெப்பநிலை மாற்றம் போன்றவைகள் ஏற்படும்.ஆகையால் இந்தக் குழப்பத்தை தவிர்க்க முறையான கர்ப்ப பரிசோதனைதான் உகந்தது.

மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்பட்டு, கருத்தரிப்பு நிகழாமல் இருக்க சாத்தியம் உண்டா?

ஆம்.சாத்தியம் உண்டு; அதாவது மாதவிடாய் சுழற்சி தாமதப்பட்டால் அதற்கு கர்ப்பம் தான் முழுக்க முழுக்க காரணம் என்று கூற இயலாது. மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்பட, பெண்களின் உடலில் ஏற்பட்ட வேறு ஏதேனும் நோய்க் குறைபாடுகளுக்கு உட்கொண்ட மாத்திரை மற்றும் மருந்துகள் கூடக் காரணமாக அமையலாம்.மேலும் மாதவிடாய் தள்ளிப்போக, தைராய்டு மாற்றங்கள், கருத்தடை சாதன உபயோகம், ஹார்மோன் மாற்றங்கள், உடலில் ஏற்படும் அதிகப்படியான மாறுதல்கள் போன்றவைக் காரணமாக இருக்கலாம். கருத்தரிப்பை உறுதி செய்ய முறையான கருத்தரிப்பு பரிசோதனை அவசியம்; வெறும் மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போவதை வைத்து கருத்தரிப்பை நிச்சயிக்க இயலாது.

மாதவிடாய் சுழற்சி மற்றும் கருத்தரிப்பு இரண்டும் இணைந்து ஏற்படுமா?

மாதவிடாய் சுழற்சி மற்றும் கருத்தரிப்பு இரண்டும் இணைந்து ஏற்பட வாய்ப்பு இல்லை; ஆனால், கருத்தரிப்பு நிகழ்வதற்கு முந்தைய கால கட்டங்களில் லேசான உதிரப்போக்கு, உதிரம் வெளிப்படுதல் போன்றவை நிகழலாம். இது கருத்தரிப்பிற்கு முன்பாக ஏற்படும் ‘கரு பதித்தல்’ என்னும் நிகழ்வு காரணமாக ஏற்படலாம்; கரு பதித்தல் என்னும் நிகழ்வு பெண்ணின் உடலில் வெளிப்படும் அண்டத்தை கருவறையில் பொருத்த நிகழும் மாற்றம் ஆகும்.

பெண்ணின் உடலில் கருத்தரிப்பு நிகழப் போவதாக இருந்தால், அச்சமயத்தில் கரு பதித்தலினால் இரத்தப்போக்கு ஏற்படலாம்; இதைத் தவிர அதாவது மாதவிடாய் சுழற்சியின் காரணமாக ஏற்படும் உதிரப்போக்கு மற்றும் கரு பதித்தலினால் ஏற்படும் உதிரப்போக்கு தவிர்த்து, பெண்களின் பிறப்புறுப்பில் உதிரம் வெளிப்படின், அதற்கு இடமாற்று கர்ப்பம், கருக்கலைப்பு, நோய்த்தொற்று, நஞ்சுக்கொடிப் பிரச்சனைகள் போன்றவைக் காரணமாக இருக்கலாம்.

வீட்டிலேயே கருத்தரிப்பை உறுதி செய்யும் பரிசோதனையைச் செய்ய எவ்வளவு காலம் ஆகும்?

பெண்களின் உடலில் அண்டம் வெளிப்பாடு நிகழந்த பின் ஒரு வார காலத்தில் கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனையை மேற்கொள்ளலாம்; ஆனால், மாதவிடாய் தள்ளிப்போய் ஒரு வார காலத்திற்கு பின்னர் பரிசோதனை செய்தால் தான் தகுந்த சரியான பரிசோதனை முடிவுகள் கிடைக்கும்.

மேலும் அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் மூலம் தான் பெண்களின் உடலில் காணப்படும்’ hCG’ அளவை சோதித்து அறிந்து, கர்ப்பத்தை உறுதி செய்ய முடியும். கர்ப்பத்தை உறுதி செய்ய உதவும் எளிய சாதனங்களும் சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றின் உதவியோடு வீட்டிலே கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்; இதற்கு சில மணி நேரங்களே தேவைப்படும். அதிக காலம் ஆகாது.

கர்ப்ப கால அறிகுறிகளை ஒரு பெண்ணால், எப்பொழுது உணர ஆரம்பிக்க முடியும்?

பொதுவாக கருத்தரிப்பு ஏற்பட்ட பின் 12 முதல்15 நாட்களில் கர்ப்பம் ஏற்பட்டதற்கான அறிகுறிகளை ஒரு பெண்ணால் அறிய முடியும் (9); மேலும் ஒரு பெண் தனது உடலில், மாதவிடாய் ஏற்படும் நாளைக் கணக்கிட்டு அண்டம் வெளிப்படும் காலத்தில், அதாவது மாதவிடாய்க்கு 10 நாட்கள் முன்னதாக உடலுறவு கொண்டால், ஆணின் விந்து பெண்ணின் உடலுக்குள் சென்று, அண்டத்துடன் இணைந்து கருமுட்டையை உருவாக்கி, அதை கருவறையில் பதிக்கும் நிகழ்வு ஏற்படும்.

இச்சமயங்களில் மாதவிடாய்க்கு முன்பான 10 நாட்களில் அல்லது ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பெண்கள் கூர்ந்து கவனித்தால், கருத்தரிப்பு ஏற்படப்போவதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்; கருத்தரிப்பிற்கு முன்னதாக ஏற்படும் அறிகுறிகளையும் உணர முடியும்.

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles