குழந்தைகளுக்கான பாடல்கள்

Written by MomJunction MomJunction
Last Updated on

உங்கள் குட்டிக் குழந்தைக்கான சின்ன சின்ன தமிழ் பாடல்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது. மழலை மொழி பேசும் உங்கள் மகவு தன்னுடைய தேன் குரலால் இந்த தமிழ்ப் பாடல்களை பாடி உங்களையும் தமிழையும் மகிழ்விக்கவே இந்த ஏற்பாடு.

உங்கள் குழந்தைக்கு பாடல்களை ஒவ்வொரு வரிகளாக சொல்லிக் கொடுங்கள். முடிந்தவரை பாடல் வரிகளுக்கேற்றபடி பாவனைகள் செய்து சொல்லிக் கொடுங்கள். அவர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். கூடவே குழந்தைகள் மறக்காமல் இருக்க ஏதேனும் மெட்டுக்களோடு சொல்லிக் கொடுங்கள்.இப்படி செய்வதால் காலங்கள் பல கடந்தாலும் தங்களுடைய குழந்தைப் பாடல்களை அவர்கள் மறக்கமாட்டார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல்களில் பல பாடல்கள் உங்கள் குழந்தைப்பருவத்தையும் சேர்த்தே நினைவூட்டும் என நம்புகிறோம். எனவே உங்கள் குழந்தைக்கும் நீங்கள் எய்திய அந்த குழந்தைக்கால சந்தோஷங்களை கீழ்க்கண்ட  பாடல்கள் மூலம் அள்ளிக் கொடுங்கள்.

1. அம்மா இங்கே வா வா

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லவர்
ஊரில் யாரோ உள்ளவர்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இனி இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.

2. ஒன்னு ரெண்டு மூணு

ஒன்னு ரெண்டு மூணு
ஓணான் எங்கே கூறு.
நாலு அஞ்சு ஆறு
மாரத்தின் மேலே பாரு.
ஏழு எட்டு ஒன்பது
என்ன அதன் பேரு
ஓணான் என்றே கூறு

3. கை வீசம்மா கைவீசு

கை வீசம்மா கைவீசு !
கடைக்குப் போகலாம் கைவீசு !
மிட்டாய் வாங்கலாம் கைவீசு !
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு !
அப்பம் வாங்கலாம் கைவீசு !
அமர்ந்து தின்னலாம் கைவீசு !
பூந்தி வாங்கலாம் கைவீசு!
பொருந்தியுண்ணலாம் கைவீசு!
பழங்கள் வாங்கலாம் கைவீசு !
பரிந்து புசிக்கலாம் கைவீசு!
சொக்காய் வாங்கலாம் கைவீசு !
சொகுசாய்ப் போடலாம் கைவீசு !
கோயிலுக்குப் போகலாம் கைவீசு !
கும்பிட்டு வரலாம் கைவீசு!
தேரைப் பார்க்கலாம் கைவீசு!
திரும்பி வரலாம் கைவீசு !
கம்மல் வாங்கலாம் கைவீசு !
காதில் மாட்டலாம் கைவீசு

4. ஆரடித்து நீயழுதாய் கண்மணி

ஆராரோ ஆரிவரோ, ஆராரோ ஆரிவரோ
ஆரடித்து நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்காய்
பாட்டி அடித்தாளோ, பாலூட்டும் கையாலே
அத்தை அடித்தாளோ, அமுதூட்டும் கையாலே
ஆராரோ ஆரிவரோ, ஆராரோ ஆரிவரோ ஆரடித்து
நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்காய்

5. நிலா நிலா ஓடி வா

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா
வட்ட வட்ட நிலவே
வண்ண முகில் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா

6. ஒன்றும் ஒன்றும் இரண்டு

ஒன்றும் ஒன்றும் இரண்டு
பூவில் இருப்பது வண்டு
இரண்டும் இரண்டும் நான்கு
இனிப்பாய் இருக்கும் தேங்காய்
மூன்றும் மூன்றும் ஆறு
வேலை செய்தால் சோறு
நான்கும் நான்கும் எட்டு
நன்றாய்ப் பாடுவாள் பட்டு
ஐந்தும் ஐந்தும் பத்து
அன்பே நமது சொத்து

7. மழையே மழையே வா வா

மழையே மழையே வா வா
மரங்கள் வளர வா வா
உலகம் செழிக்க வா வா
உழவர் மகிழ வா வா
குளங்கள் நிறைய வா வா
குடைகள் பிடிக்க வா வா
ஆறு ஓட வா வா
ஆட்டம் போட ஓடி வா

8. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக் கிளியே சாய்ந்தாடு
தித்திக்கும் தேனே சாய்ந்தாடு
தெவிட்டாத தமிழே சாய்ந்தாடு
மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடப்புறாவே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
காய்ச்சிய பாலே சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
குட்டி நிலவே சாய்ந்தாடு

9. மாம்பழமாம் மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வா போன்ற மாம்பழம்
தங்க நிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்

10. ஆனை ஆனை

ஆனை ஆனை
அழகர் ஆனை
அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை
முறிக்கும் ஆனை
காவேரி தண்ணீரை
கலக்கும் ஆனை
குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்!

11. அணிலே அணிலே

அணிலே அணிலே ஓடி வா!
அழகு அணிலே ஓடி வா!
கொய்யா மரம் ஏறி வா!
குண்டு பழம் கொண்டு வா!
பாதி பழம் என்னிடம்
பாதி பழம் உன்னிடம்!
கூடி சேர்ந்து இருவரும்
கொரித்து கொரித்து தின்னலாம்!

12. துண்டுத் தாள்கள் கிடந்தன

துண்டுத் தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன்!
துண்டுத் துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய்ப் பொம்மை செய்தனள் !
வண்ணத் தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர்!
சின்னப் பையன் கண்டனன்
சேர்த்துப் பூக்கள் செய்தனன்!
சிறிய துரும்பும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே !
சின்னஞ் சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே!

13. குட்டி குட்டி பாப்பா

குட்டி குட்டி பாப்பா
குண்டு கன்னம் பாப்பா
தத்தி தத்தி நடந்திடும்
கட்டித் தங்க பாப்பா
கண்கள் உருட்டி மிரட்டுவாள்
வாய் பொத்தி சிரிக்கும் பாப்பா
சுட்டித்தனம் செய்திடும்
எங்கள் சக்தி பாப்பா

14. சின்னச் சின்ன நாய்க்குட்டி

சின்னச் சின்ன நாய்க்குட்டி
தூய வெள்ளை நாய்க்குட்டி
பஞ்சுப் பொதி நாய்க்குட்டி
பன்னும் தின்னும் நாய்க்குட்டி
சின்னச் சின்னக் குழந்தைகள்
கொஞ்சி மகிழும் நாய்க்குட்டி
உன்னைக் கண்டால் பிஞ்சுகள்
நெஞ்சம் மகிழ்ச்சி கொள்ளுமே!
துள்ளித் துள்ளி ஓடுவாய்
உன்னை அள்ளி அள்ளித் தூக்கலாம்
வாசலிலே மற்றவர் வந்து
நின்றால் போதுமே!
சிங்க கர்ஜனை செய்வாயே!
சிறுவர் விரும்பும் நாய்க்குட்டி
பாலும் ரொட்டியும் பாந்தமாய்
தந்து விட்டால் போதுமே!
வாலை வாலை ஆட்டியே
வரவேற்பு தருவாயே!

15. சிலந்தி வலையை பாருங்கள்

சிலந்தி வலையை பாருங்கள்
சின்னஞ் சிறிய பூச்சியே
வளைந்து வளைந்து புதுமையாய்
வட்ட வலையைப் பின்னுமே !
தேனிக் கூட்டை பாருங்கள்
திறமையோடு ஒற்றுமை பேணி வீட்டைக் கட்டுமே
பெரிய முயற்சி வேண்டுமே
எறும்புப் புற்றைப் பாருங்கள்
எள்ளைப் போன்ற எறும்புகள்
அருமையான முயற்சியால்
அழகுப் புற்றைச் செய்தன
குருவிக் கூட்டைப் பாருங்கள்
குடுக்கை போன்று பின்னியே வி
ரைவில் கட்டி முடிக்குமே
வேண்டும் முயற்சி என்றுமே!

16. வட்டமான தட்டு

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு.
எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு.
கிட்டு நான்கு லட்டு,
பட்டு நான்கு லட்டு,
மொத்தம் தீர்ந்த தெட்டு
மீதம் காலித் தட்டு

17. வானத்திலே திருவிழா

வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடியிடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டு திக்கும் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெங்கும் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
தவளை கூட பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை

18. குள்ள குள்ள வாத்து

குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து

19. தோசை அம்மா தோசை

தோசை அம்மா தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவிற்கு நான்கு
அண்ணனுக்கு மூன்று
அக்காவுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஒன்று
சீனி நெய்யும் சேர்த்து
கூடி கூடி உண்போம்

20. பொம்மை பொம்மை பொம்மை பார்

பொம்மை பொம்மை பொம்மை பார்
புதிய புதிய பொம்மை பார்
கையை வீசும் பொம்மை பார்
கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்
தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்
எனக்கு கிடைத்த பொம்மை போல்
ஏதும் இல்லை உலகிலே

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles