சுகப்பிரசவம் நிகழ உதவும் குறிப்புகள் பற்றி அறிவீரா?

Written by Soundarya Subbaraj
Last Updated on

உலகில் பல வகைப்பட்ட மனிதர்கள் வாழ்கின்றனர்; மக்கள் அனைவரும் மொழி, கலாச்சாரம், இனம், மதம் போன்ற விஷயங்களால் வேறுபட்டு காணப்படுகின்றனர். மக்கள் இடையே இத்தனை வேறுபாடுகள் நிலவினாலும், அவர்கள் அனைவருக்கும் ஏற்படும் உணர்வு ஒரே விதமானதாய் தான் விளங்குகிறது; உணர்வுகளில் கூட ஒரு சில வித்தியாசங்கள் ஏற்பட்டாலும், ஒரே ஒரு உணர்வு உலகில் எங்கு நோக்கினும் அனைத்து ஜீவ ராசிகளிடையேயும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். அது என்ன உணர்வு தெரியுமா? அது தான் தாய்மை உணர்வு.

பெண்களுக்கு ஏற்படும் தாய்மை உணர்வு, விலங்குகள், பறவைகள் என எல்லா வகை உயிரினங்களிடையேயும் ஒன்றுபட்டு தான் காணப்படுகிறது. இந்தத் தாய்மை உணர்வை அடைவதே உலகில் வாழும் ஒவ்வொரு பெண்ணின் கனவு ஆகும்; பழங்காலத்தில் பெண்கள் கர்ப்பம் தரித்தால், பெண்ணின் கருவறையில் வளர்ந்து வரும் குழந்தையை வெளியே எடுக்க சுகப்பிரசவம் என்ற ஒரு முறையே நடைமுறையில் இருந்தது. ஆனால் இக்காலத்தில் குழந்தையை வயிற்றில் இருந்து எடுக்க சுகப்பிரசவம் முறையைக் காட்டிலும் அதிகமாக, அறுவை சிகிச்சை முறையே பின்பற்றப்படுகிறது; இதற்கு காரணம் மக்களின் அறியாமை தான் (1).

காலம் காலமாக நம் முன்னோர் பின்பற்றி வந்த சுகப்பிரசவம் அல்லது இயற்கை பிரசவ முறை மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அதனைப் பற்றி இந்த காலத்து மக்கள் அறிந்து, நம் முன்னோர் வழி நடத்தல் நன்று; இன்றைய சந்ததியினருக்கு சுகப்பிரசவத்தின் அருமையை மற்றும் அது குறித்த விரிவான தகவல்களை உணர்த்தும் வகையில்,மாம்ஜங்ஷன் (MomJunction) சுகப்பிரசவம் குறித்த தகவல்களை இப்பதிப்பில் தொகுத்து வழங்கி உள்ளது. வாருங்கள்! பதிப்பைப் படித்து அறிவோம்! பெண்களுக்கு சிசேரியனால் ஏற்படும் பாதிப்பை தடுப்போம்.!

சுகப்பிரசவம் என்றால் என்ன?

சுகப்பிரசவம் என்பது குழந்தையைப் பிரசவிக்க உதவும் ஒரு பொதுவான வழி முறை ஆகும்; இந்த முறையில் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தை இயற்கையான முறையில், பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக வெளியே எடுக்கப்படுகிறது. குழந்தையை வெளியில் எடுக்க பெண்ணின் இடுப்பு எலும்புகள் சற்று வளைந்து கொடுத்தல் மற்றும் பெண்ணின் பிறப்புறுப்பில் குழந்தை வெளியேற தேவையான அளவு கிழிசல் போன்ற நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் பெண்களின் உடலில் ஏற்படுகின்றன (2).

சுகப்பிரசவம் என்பது எந்த ஒரு பெண்ணுக்கும் ஏற்படலாம்; பிரசவ வலியை எண்ணி அஞ்சும் பெண்கள் தானாக முன் வந்து இந்த பிரசவ முறையை தவிர்த்து, அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் செய்து கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமாகி விட்டது. இந்தப் பதிப்பில் சுகப்பிரசவத்தின் உண்மை விவரத்தை அறிந்து கொண்டால், பெண்களின் பிரசவம் குறித்த முடிவு மாறலாம்.

பொதுவாக ஆரோக்கியமான நிலையில் இருக்கும் தாய் மற்றும் சேய்க்கு சுகப்பிரசவம் தான் மேற்கொள்ளப்படும்; கர்ப்பம் தரித்து இருக்கும் பெண்ணின் உடலில் ஏதேனும் உடல் குறைபாடுகள் அல்லது குழந்தைக்கு ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டு இருந்தால் மற்றும் இந்த குறைபாடுகளால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படும் எனும் பட்சத்தில் மட்டுமே சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படும்.

சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகரிக்க உதவும் காரணிகள் என்னென்ன?

கர்ப்பம் தரித்து இருக்கும் பெரும்பாலான பெண்கள், தனக்கு சுகப்பிரசவம் நிகழ வேண்டும் என்று ஆசை கொள்கின்றனர்; இந்த ஆசை நிகழ, சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். மேலும் சுகப்பிரசவம் நிகழ இருக்கும் வாய்ப்பை அதிகரிக்க வேண்டியதும் அவசியம்; இப்பொழுது சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகரிக்க உதவும் காரணிகள் என்னென்ன என்பது பற்றிப் பார்க்கலாம்.

1. முந்தைய பிரசவம்

முன்பே சுகப்பிரசவத்தை சந்தித்து இருக்கும் பெண்கள் அதாவது பெண்களுக்கு முதல் பிரசவம் சுகப்பிரசவமாக ஏற்பட்டு இருந்தால், அடுத்த பிரசவமும் சுகப்பிரசவமாக நிகழும் வாய்ப்பு உண்டு; இதை சுகப்பிரசவம் நிகழும் வாய்ப்பை அதிகரிக்கும் ஒரு காரணி என்றே குறிப்பிடலாம்.

2. கர்ப்பிணிப் பெண்ணின் உடல் நிலை

கருத்தரித்து இருக்கும் பெண்கள் ஆஸ்துமா போன்ற நீண்ட காலத்திற்கு தாக்குதலை ஏற்படுத்தி, வாட்டி வதைக்கும் நோய்களுக்கு ஆளாகாமல் இருந்தால், அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

3. கர்ப்பிணிப் பெண்களின் உடல் எடை

கருத்தரித்து இருக்கும் பெண்கள் சராசரியான – சரியான உடல் எடையைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்; அப்படி சரியான எடை கொண்டிராமல், அதிகமான எடை கொண்டிருந்தால், அதனால் குண்டான – உடல் எடை அதிகரித்த குழந்தை பிறக்கலாம். இதனால் சுகப்பிரசவம் நிகழும் வாய்ப்பு குறையலாம்; ஆகையால் கருத்தரித்து இருக்கும் பெண்கள் சரியான உடல் எடையை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

4. கர்ப்பத்தில் சிக்கல்கள்

கருத்தரித்து இருக்கும் பெண்களின் கர்ப்ப காலம் மற்றும் அச்சமயத்தில் உடல் மற்றும் மன நிலை போன்றவை சீராக, சிக்கல்கள் இன்றி இருந்தால், நிச்சயம் சுகப்பிரசவம் நிகழும்; அதற்கான வாய்ப்புகள் உண்டு.

5. கர்ப்பிணிப் பெண்ணின் உடல் குறைபாடுகள்

கருத்தரித்து இருக்கும் பெண்களின் உடலில் சரியான அளவு இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, ஹீமோகுளோபின் போன்றவை இருத்தல் அவசியம்; இவை அதிகமானாலோ குறைந்தாலோ பிரசவத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

6. சுறுசுறுப்பு அவசியம்

கருத்தரித்து இருக்கும் பெண்கள், கர்ப்ப காலத்தில் நன்கு ஓடி ஆடி – சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும்; அவ்வாறு செய்தால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்றும், சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது (3).

இங்கு அளிக்கப்பட்டு இருக்கும் காரணிகள் நிகழ்ந்தால் சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்; ஆனால், இந்த காரணிகளை மட்டும் பின்பற்றினால், 100% சுகப்பிரசவம் நிகழும் என்று உறுதியாகக் கூற முடியாது. சுகப்பிரசவம் நிகழ்வது ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணின் உடல் மற்றும் மன நிலைகள், அவர்கள் வாழும் இடம், சூழல் மற்றும் பல காரணிகளையும் சார்ந்து இருக்கும்.

சுகப்பிரசவம் நிகழ உதவும் குறிப்புகள்

கர்ப்பம் தரித்து இருக்கும் பெண்களின் நலத்திற்கும், பிறக்க போகும் குழந்தையின் நலத்திற்கும் சுகப்பிரசவம் அதிக நன்மையைப் பயக்கும்; சுகப்பிரசவம் என்பது ஒரு எளிமையான பிரசவம் ஆகும்.

சிசேரியன் பிரசவத்துடன் ஒப்பிடுகையில் சுகப்பிரசவம்,கர்ப்பிணிப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் பல விதமான நன்மைகளை அளிக்கும்; அப்படிப்பட்ட பயன் தரும் சுகப்பிரசவம் நிகழ உதவும் குறிப்புகள் என்னென்ன என்று இங்கு காணலாம்.

1. மன அழுத்தததில் இருந்து தள்ளி இருங்கள்!

கர்ப்பம் அடைந்து இருக்கும் பெண்கள் மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் மற்றும் விஷயங்களில் இருந்து தள்ளி இருக்க வேண்டியது முக்கியம். மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிப் பெண்கள் கீழ்க்கண்ட செயல்களைப் புரியலாம்:

  • மனதிற்கு அமைதி தரும் இனிய இசையைக் கேளுங்கள்.
  • நல்ல கருத்துள்ள மற்றும் பயன் தரும் புத்தகங்களைப் படித்தல்.
  • மோசமான சூழ்நிலைகளில் இருந்து விலகி இருத்தல்.
  • விரும்பதகாத விஷயங்களை உரைக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருத்தல்.

2. நேர்மறை எண்ணங்கள்

கர்ப்பிணிப் பெண்கள் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டியது அவசியம்; பிரசவம் குறித்த எதிர்மறையான எண்ணங்களை மனதில் கொண்டிராமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்.

  • பிரசவம் குறித்த மோசமான நிகழ்வுகளை யாரேனும் பகிர்ந்து கொண்டால், அந்த இடத்தில் இருப்பதையும் அவர்கள் கூறுவதை செவியுறுவதையும் தவிருங்கள்.
  • வதந்தி பேச்சுகள் பேசுவதை அல்லது கேட்பதை தவிர்த்து விடுங்கள்.
  • பிரசவ வலி அல்லது பிரசவம் குறித்த பயம் ஏற்படுத்தும் செய்திகள் அல்லது விஷயங்கள் பற்றிக் கேட்பதை தவிர்க்க முயலுங்கள்.

3. பிரசவம் குறித்த அறிவு

கர்ப்பம் அடைந்து இருக்கும் பெண்கள், பிரசவம் குறித்த அறிவை வளர்த்து கொள்ள முயல்வது நல்லது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கர்ப்பத்தின் ஒவ்வொரு வாரம் குறித்தும், குழந்தையின் வளர்ச்சி குறித்தும், கர்ப்பகால உடல் மாறுதல்கள் பற்றியும் நன்கு படித்து அறிந்து, நிகழும் விஷயங்களைத் தெரிந்து நடப்பது நல்லது.

  • பிரசவம் குறித்த அத்தனை சந்தேகங்களையும் மகப்பேறு மருத்துவரிடம் கேட்டுத் தெளிதல் வேண்டும்.
  • பிரசவம் பற்றிய புத்தகங்களைப் படியுங்கள்.
  • அன்னை போன்ற வயது முதிர்ந்த அனுபவசாலி உறவினரிடம் பிரசவம் குறித்த சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
  • கர்ப்ப காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தகவல்களைப் படித்து அறியுங்கள்.
  • கர்ப்ப கால மேலாண்மை வகுப்பில் சேர முயலுங்கள்.

4. ஆதரவு ஆதாரம்

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு உணர்வு ரீதியாக மற்றும் பொதுவான செயல்பாடுகளுக்கு உதவிட ஆதரவு என்பது அவசிய தேவை. கர்ப்பத்தின் ஆரம்ப கால கட்டங்களில் பெண்களுக்கு ஓய்வு என்பது மிகவும் அவசியம்; மேலும், கர்ப்பத்தின் இறுதி கால கட்டத்திலும் பெண்களுக்கு ஓய்வு மற்றும் ஒத்துழைப்பு போன்றவை அதிகம் தேவை. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உதவி மற்றும் ஆதரவை அளிக்க அவர்தம் குடும்பத்தினர் முன் வர வேண்டும்; கர்ப்பமாக இருக்கும் பெண் சுமப்பது தங்கள் குடும்ப வாரிசு என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்தம் துணை, கர்ப்ப காலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக – ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம்.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு இல்லாதாரின் துணை அவசியம் தேவை மற்றும் அவர்தம் ஆதரவும் தேவை.
  • சரியான ஆதரவு கிடைத்தால், பெண்களுக்கு தைரியம் தானாக ஏற்படும்.

5. மருத்துவர் தேர்வு

கர்ப்பமாக இருக்கும் பெண்கள், மகப்பேறு மருத்துவரைத் தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியம். பெண்கள் கர்ப்பம் அடைந்த உடன் அல்லது கர்ப்பத்தை பரிசோதிக்க என, ஆரம்ப கட்டங்களில் மருத்துவரைப் பார்க்க செல்வதில் தொடங்கி, இறுதி வரை மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி கொண்ட, நல்ல தரமான மருத்துவரைத் தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

மருத்துவரைத் தேர்வு செய்கையில், மருத்துவமனையின் பளபள தோற்றம், விளம்பரம் ஆகியவற்றை கண்டு மயங்கி தேர்ந்தெடுக்காமல், மருத்துவர் மற்றும் செவிலியரின் தன்மை, குணம் மற்றும் சிகிச்சையின் தரம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிந்து மகப்பேறு மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவமனையைத் தேர்வு செய்தல் வேண்டும்.

  • மருத்துவர் மற்றும் மருத்துவமனைப் பற்றி நன்கு விசாரித்து மகப்பேறு மருத்துவரைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • மருத்துவரின் அனுபவம் குறித்து அறிந்த பின், அவரிடம் கலந்துரையாடிய பின் மருத்துவர் தேர்வை உறுதி செய்ய வேண்டும்.
  • மருத்துவர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நிகழ்த்தலாம் என தகுந்த காரணங்கள் இன்றி உரைத்தால், உடனடியாக மருத்துவரை மாற்றி விடுங்கள்; வேறு ஒரு நல்ல மருத்துவரைத் தேர்வு செய்யுங்கள்.

6. அனுபவசாலி ஆயா

பிரசவம் நிகழ்ந்த பின் துணைக்கு இருக்க அல்லது உதவி புரிய பெற்றோர்கள் இருந்தால் நல்லது; அவர்கள் உடன் இருக்க இயலாத நிலை ஏற்பட்டால், ஒரு அனுபவசாலி ஆயாவை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவம் நிகழ்ந்த பின் என எல்லா நேரங்களிலும் உறவுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து இருக்க இயலாது; ஆகையால், முடிந்த அளவு ஒரு அனுபவசாலி ஆயாவைத் தேர்வு செய்து உடன் வைத்துக் கொள்ளுங்கள்.

  • ஒரு அனுபவம் வாய்ந்த நபர் உடன் இருந்தால் கர்ப்ப காலம் குறித்த சந்தேகங்களைக் கேட்டு தெளியலாம்.
  • சரியான நபரைத் தேர்வு செய்தால், அவர் கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவ சமயத்தில் உதவியாக இருப்பார்.
  • குழந்தை வளர்ப்பிலும் ஆயா துணை புரிவார்.

7. மசாஜ் முறைகள்

சுகப்பிரசவம் நிகழ சரியான மசாஜ் முறைகளை மேற்கொள்வது உதவும்; மேலும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் கர்ப்ப கால சோர்வு நீக்கம் போன்றவற்றிற்கு மசாஜ் மிகவும் உதவும்.

சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது, கர்ப்பிணிப் பெண்களின் உடலில் ஏற்பட்ட களைப்பை போக்க பெரிதும் உதவும்; மருத்துவ ஆலோசனைக்குப் பின்னரே எந்த ஒரு மசாஜ் முறையையும் கர்ப்பிணிப் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்; அதுவே பாதுகாப்பானது.

  • மசாஜ் செய்ய மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  • உடல் முழுவதிலும் மற்றும் வயிற்று பகுதியில் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
  • பிறப்புறுப்பு பகுதியில் மருத்துவரின் ஆலோசனைப்படி மசாஜ் முறைகளை மேற்கொள்ளுங்கள்; இது சுகப்பிரசவம் நிகழ உதவும் (4).

8. நீர்ச்சத்து

கர்ப்பத்தினால் ஏற்படும் களைப்பை போக்க நீர்ச்சத்து அவசியம்; ஆகையால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் வளரும் கரு நீர் சூழ்ந்த பனிக்குடத்தில் தான் வளர்கிறது; ஆகையால், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடலில் தண்ணீர் மிகுந்து விடாமல் இருக்கும் வகையில், அதே சமயம் உடலில் நீரின் அளவு குறைந்து விடாமலும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

  • கர்ப்பம் அடைந்து இருக்கும் பெண்கள் உடலுக்கு தேவையான அளவு மற்றும் பிரசவத்தை எளிதாக்க தேவையான அளவு நீரைப் பருக வேண்டும்.
  • நீர் மட்டும் அல்லாது பழச்சாறு, இயற்கை பானங்கள் போன்றவற்றையும் பருகி வருதல் வேண்டும்.

9. தண்ணீர்ப் பயன்பாடு

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர்ப் பருகுவதோடு, உடலின் வெப்ப நிலையை சம நிலையில் வைக்க நீரைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் தண்ணீரை அதிகம் பயன்படுத்துவது அவர்தம் உடல் நலனுக்கு நன்மையை அளிக்கும்.

  • உடலின் சூடு மற்றும் வெப்பத்தை குறைக்க நன்கு வெந்நீர் குளியல் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • சில சமயங்களில் அழுத்தம், வருத்தம், சோர்வு, அயர்வு போன்ற உணர்வுகளை போக்கவும் சரியான குளியல் பெரிதும் உதவும்.
  • உடலின் இயக்கத்தை சீராக வைக்க குளியல் மற்றும் தண்ணீர் பருகுதல் உதவும்.

10. ஐஸ் விளையாட்டு

ஐஸ் கட்டிக் கொண்டு விளையாடுவது, பிரசவம் பிரச்சனையின்றி நிகழ உதவும் என்று சில ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த ஐஸ் கட்டி விளையாட்டினை மேற்கத்திய நாட்டு மக்கள் அதிகம் பின்பற்றுகின்றனர்; மேலும் இதனால் பயனுள்ள விளைவுகளும் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

  • ஐஸ்கட்டியைக் கையில் 60 நொடிகளுக்கு வைத்திருக்க முயலுங்கள்.
  • ஐஸ்கட்டியைக் கையில் வைத்துக் கொண்டு துணையுடன் பேசுங்கள்.
  • ஐஸ்கட்டியைக் கையில் வைத்துக் கொண்டு துணையுடன் இணைந்து நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
  • ஐஸ்கட்டியைக் கையில் வைத்துக் கொண்டு, 60 நொடிகளுக்கு அமைதியாக இருக்க முயலுங்கள்.

11. உடல் நிலைகள்

உடல் நிலைகளான அமருதல், நிற்றல் செயல்பாடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; இந்த நிலைகளில் ஏற்படும் தேவையற்ற மாற்றங்களால் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயங்களில், தாங்கள் மேற்கொள்ளும் உடல் நிலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

  • உட்காரும் பொழுது முதுகுத்தண்டு நேராக இருக்கும் வகையில் அமருங்கள்; இதனால் வயற்றில் இருக்கும் குழந்தையின் நிலை பாதிக்கப்படாமல் இருக்கும்.
  • அதிக நேரம் காலை தொங்கவிட்டு அமர வேண்டாம்; காலை மடித்தோ அல்லது நீட்டியோ அமருங்கள்.
  • அமர்ந்து இருக்கும் பொழுதோ அல்லது பொருட்களைத் தூக்கும் பொழுதோ பாதிப்பை ஏற்படுத்தும் குனிதல் போன்ற உடல் இயக்கங்களைத் தவிருங்கள்.

12. உடல் எடை அதிகரிப்பு

சுகப்பிரசவம் நிகழ கர்ப்பிணிப் பெண்கள் சரியான உடல் எடைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து அதிகம் உண்ணும் பழக்கத்தை கர்ப்ப காலத்தில் ஏற்படுத்தி கொள்வர்; இதனால், கர்ப்பிணிப் பெண்களின் உடல் எடை அதிகரித்து விடுகிறது. கூடிய உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வர மற்றும் சரியான உடல் எடையை மேற்கொள்ள கர்ப்பிணிப் பெண்கள் முயல வேண்டும். இது சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

  • உடல் எடை சரியான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
  • உடல் எடை அதிகமாக இருந்தால், உரிய மற்றும் பாதுகாப்பான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு குறைக்க முயலுங்கள் (5).

13. உடல் இயக்க செயல்பாடுகள்

சுகப்பிரசவம் நிகழ கர்ப்பிணிப் பெண்களின் உடலானது சரியான இயக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம்; வீட்டில் இருக்கும் வேலைகளை செய்வது கூட உடல் இயக்கத்திற்கான பயிற்சி தான். ஆகையால் எவ்வளவு சுறுசுறுப்புடன் கர்ப்பிணிப் பெண் இருக்கிறாரோ, அவ்வளவு எளிதாக பிரசவம் நிகழும்.

  • உடல் இயக்க செயல்பாடுகளை கற்பிக்கும் நிபுணரின் உதவியை நாடுங்கள்.
  • சரியான உடல் இயக்கங்களை மேற்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
  • சரியான உடல் இயக்கங்களை மேற்கொள்வதன் மூலம் மனதில் ஏற்படும் அழுத்தம், வருத்தம் போன்றவற்றைக் குறைக்கலாம்.
  • சரியான உடல் இயக்கங்களை மேற்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் முதுகுவலி, மூட்டுவலி போன்ற உடல் உபாதைகளையும் போக்கலாம்.
  • மாதம் ஒரு முறை பயிற்சியாளரை சந்தித்து, உடல் இயக்கத்தின் நிலைப் பற்றி கலந்துரையாடுங்கள் (6).

சுகப்பிரசவம் நிகழ உதவும் உணவுக் குறிப்புகள்

சுகப்பிரசவம் நிகழ, சரியான உடல் செயல்பாடுகளுடன், சரியான உணவு முறையும் அவசியம்.

14. சரியானதை உண்ணுங்கள்

உடலுக்கு நலம் மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.

  • ஆரோக்கியம் அளிக்கும் பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள், பால் பொருட்களை உண்ணுங்கள்.
  • அடர்ந்த பச்சை நிறம் கொண்ட காய்கறிகளை உட்கொள்ளுங்கள்.
  • அதிக புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
  • உடலுக்கு நன்மை ஏற்படுத்தாத இறைச்சி உண்பதை தவிருங்கள்.
  • ரெட்டினால் உள்ள உணவுகளை தவிருங்கள்.
  • உட்கொள்ளும் சர்க்கரை அளவை குறையுங்கள்.
  • சரியான – நன்மை பயக்கும் கடல் உணவுகளை உட்கொள்ளுங்கள்.
  • தெருவோர துரித உணவுகளைத் தவிருங்கள் (7).

15. ப்ரோமிலெய்ன் நிறைந்த உணவுகள்

ப்ரோமிலெய்ன் நிறைந்த உணவுகள் பிறப்புறுப்பை பலப்படுத்த மற்றும் பிரசவம் நல்ல முறையில் நிகழ உதவும்.

  • ப்ரோமிலெய்ன் நிறைந்த மாம்பழம், அன்னாசி போன்ற பழங்களை உட்கொள்ளுங்கள்.
  • ப்ரோமிலெய்ன் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைப் பச்சையாக உண்ணுங்கள்.
  • இந்த ப்ரோமிலெய்ன் நிறைந்த உணவுகளை அதிகம் உண்ண வேண்டாம்; அப்படி மீறி உண்டால் குறை மாத குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு (8).

16. காரமான உணவுகள்

கர்ப்பிணிப் பெண்கள் காரமான உணவுகளை மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு உண்ண வேண்டும் (9)

  • காரமான உணவுகள் உடலுக்கு சரியான வெப்ப உணர்வை தந்து, சுகப்பிரசவம் நிகழ உதவும்.
  • ஆனால் சில கர்ப்பிணிப் பெண்களுக்கு காரமான உணவுகளால் செரிமான கோளாறு, நெஞ்சு எரிச்சல், வயிற்றுபோக்கு போன்ற உடல் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு; ஆகையால் முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின் காரமான உணவுகளை உட்கொள்வது நல்லது.

சுகப்பிரசவம் நிகழ உதவும் கர்ப்ப கால உடற்பயிற்சிகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் முறையான மற்றும் சரியான உடற்பயிற்சி செய்வது சுகப்பிரசவம் நிகழ பெரிதும் உதவும்; மேலும் இவ்வாறு உடற்பயிற்சி செய்வது பிறப்புறுப்பு தசைகளை வலிமைப்படுத்த உதவும். ஆனால், உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும் முன் முறையான மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்; மருத்துவ ஆலோசனை மேற்கொண்ட பின்னரே எந்த ஒரு பயிற்சியையும் செய்ய வேண்டும் (10).

17. சரியான மூச்சு பயிற்சிகள்

பிரசவ காலத்தில் மூச்சு தொடர்பானப் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு. வலி இல்லாத சுகப்பிரசவம் ஏற்பட இது போன்று மூச்சு மற்றும் உடற்பயிற்சிகள் பெரிதும் உதவும்.

  • நெஞ்சிலிருந்து மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளல்.
  • வயிற்றிலிருந்து மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளல்.
  • ஆழம் குறைந்த மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளல்.
  • ஆழம் குறைந்த மற்றும் ஆழம் நிறைந்த மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளல்.

18. நடைப்பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி

கர்ப்பிணிப் பெண்கள் ஒன்பது மாதங்கள் முடிந்த பின் சுகமான சுகப்பிரசவம் நிகழ மற்றும் சிசேரியனுக்கு பிறகும் சுகப்பிரசவம் நிகழ வேண்டும் என்று எண்ணும் பெண்கள் இந்த இரண்டு பயிற்சிகளையும் கண்டிப்பாக செய்வது நல்லது.

  • நடைப்பயிற்சி என்பது மிகவும் எளிதான மற்றும் மிக முக்கியமான உடற்பயிற்சி ஆகும்; இதனை ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது கர்ப்பிணிப் பெண்கள் செய்து வர வேண்டியது மிகவும் அவசியம்; இது மலச்சிக்கல், உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் குறைபாடுகளை நீக்கி, சுகப்பிரசவம் நிகழ உதவும்.
  • சுகப்பிரசவம் நிகழ நீச்சல் பயிற்சி மிகவும் உதவும்; தசை பாதிப்பை சரி செய்தல், இதய துடிப்பை சீராக்குதல், தசைகளைப் பலப்படுத்துதல் போன்ற நன்மைகளைக் கர்ப்பிணிப் பெண்கள் நீச்சல் பயிற்சியால் அடைய முடியும்.

19. சராசரி – சாதாரண உடற்பயிற்சிகள்

சில பொதுவான – சாதாரண உடற்பயிற்சிகளைத் தினசரி புரிந்து வருவது, எளிதான சுகப்பிரசவம் நிகழ உதவும்.

  • தசைகளைப் பலப்படுத்த உதவும் கெஜல் உடற்பயிற்சி .
  • பிறப்புறுப்பு தசைகளைப் பலப்படுத்த உதவும் பட்டாம்பூச்சி உடற்பயிற்சி.
  • பெல்விக் தசைகளைப் பலப்படுத்த உதவும் பட்டாம்பூச்சி உடற்பயிற்சி.
  • சரியான பிறப்பு நிலைக்கு உதவும் ஸ்குவாட் உடற்பயிற்சி.

20. கர்ப்ப கால யோகா பயிற்சி

யோகா பயிற்சி, ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெற உதவுவதோடு சுகப்பிரசவம் நிகழவும் உதவும்.

  • சரியான மூச்சு விடும் முறையோடு கூடிய யோகா பயிற்சி பிரசவம் எளிதாக நிகழ உதவும்.
  • கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு உதவும் சில சரியான யோகா பயிற்சிகளை மருத்துவ ஆலோசனைக்கு பின் மேற்கொள்ளல் வேண்டும்.
  • நெஞ்சு, தோள்பட்டை, இடுப்பு போன்ற உறுப்புகளுக்கான பிரத்யேக யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் (11).

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles